ஜம்மு காஷ்மீரில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு; மாயமான 33 பேரை தேடும் பணி தீவிரம்
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி அதிகனமழை கொட்டியது. இதில் மச்சைல் மாதா கோவிலுக்குச் செல்லும் புனித யாத்திரை வழித்தடத்தில் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. ஒரு தற்காலிக சந்தை மற்றும் பாத யாத்திரை பயணிகள் சமையல் செய்து சாப்பிடும் தளம் ஆகியவற்றை வெள்ளம் முற்றிலும் சேதப்படுத்தியது. இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. தற்போதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் மாயமாகி இருந்தனர். அவர்களை மீட்கும்பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அவர்கள் தற்காலிக பாலம் அமைத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியை துரிதப்படுத்தி ஏராளமானவர்களை மீட்டனர். இந்நிலையில், தற்போதுவரை 33 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை கண்டுபிடிக்க அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களான லங்கார் (சமையல் தளம்), குலாப்கர், பத்தார் ஆகிய பகுதிகளில் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மீட்பு படை கூட்டுக்குழுவினர், நல்லா ஆற்றின் முழு நீள பகுதியில் நீரில் மூழ்கியும், பாறைகள், குப்பைகளை அப்புறப்படுத்தியும் மாயமானவர்களை தேடி வருகிறார்கள். மண் அள்ளுபவர்கள் மற்றும் மோப்பநாய்கள், தோண்டும் எந்திரங்களும் மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீட்பு பணிகளை மேற்பார்வை செய்து வருகிறார்கள். மழை வெள்ளம், நிலச்சரிவு பாதிப்பால் மச்சைல் மாதா யாத்திரை புதன்கிழமை வரை 7 நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. நேற்று பக்தர்களை அனுமதிக்கலாமா என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.