மீனவர்கள் படகில் 400 கிலோ மீன்பிடிவலை வெட்டி பறிப்பு: இலங்கை கடல் கொள்ளையர் அட்டூழியம்
வேதாரண்யம்: வேதாரண்யம் மீனவர்களின் படகில் 400 கிலோ மீன்பிடி வலையை இலங்கை கடற்கொள்ளையர்கள் வெட்டி பறித்து சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம், மீனவ கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் முருகேன் மற்றும் மாரியப்பன், மகாலிங்கம், ராஜா, ஆனந்தவேல், ஆகிய 5 மீனவர்கள் கடந்த 13ம் தேதி மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கு கிழக்கே 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் படகுமீது மோதினர். பின்னர் 400 கிலோ வலைகளை வெட்டி எடுத்து, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றனர். பின்பு, மீதி வலைகளுடன் மீனவர்கள் நேற்று காலை வெள்ளப்பள்ளம் கடற்கரைக்கு வந்தனர். அவர்கள், மீனவ பஞ்சாயத்தார்கள், கடலோர குழும போலீசார் மற்றும் மீன்வளத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மீனவர் கிராமத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
* படகை திருடி வந்த இலங்கை வாலிபர்கள் 2 பேர் கைது
இலங்கையில் இருந்து கடந்த 8ம்தேதி இந்திய எல்லைக்குள் கடற்பரப்பில் படகுடன் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது படகு பழுது ஏற்பட்டு கோடியக்கரைக்கு தென்கிழக்கு 7 கடல் மைல் தொலைவில் தத்தனித்து கொண்டிருந்தனர். அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்டம் ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த மீனவர்களிடம் உதவி கேட்டனர். அவர்களையும், படகையும் மீட்டு ஆறுக்காட்டுத்துறை கடற்கரைக்கு நேற்று காலை கொண்டு வந்தனர்.
வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் இலங்கையை சேர்ந்த வினோத்குமார்(32), சிந்துஜன்(28) என்பதும், காங்கேசன் துறையில் கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகை திருடி வந்ததும் தெரியவந்தது. இவர்கள் கடத்தலுக்கு வந்தார்களா என கியூபிராஞ்ச் போலீசார், உளவுத்துறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
* 8 மீனவர்களுக்கு ரூ.9 லட்சம் அபராதம்
ராமேஸ்வரத்தில் இருந்து ஜூன் 29ம் தேதி கடலுக்கு சென்ற அண்ணாமலை, கல்யாணராமன், செய்யது இபுராகிம், உள்பட 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வவுனியா சிறையில் அடைத்தனர். இவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 8 பேருக்கும், இந்திய மதிப்பில் ரூ.9 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
அபராத தொகை செலுத்திய பின் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜூன் 30ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட 7 மீனவர்கள், ஜூலை 22ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்கள், ஜூலை 28ம் தேதி சிறைபிடிக்கப்பட்ட 5 மீனவர்கள் என 16 மீனவர்களுக்கு வரும் 29ம் தேதி வரை காவலை நீட்டித்து தலைமன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.