மரக்காணம் அருகே கடலில் மிதந்து வந்த 50 கிலோ உயர் ரக கஞ்சா: போலீசாரிடம் மீனவர்கள் ஒப்படைத்தனர்
மரக்காணம்: மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் கடலில் நள்ளிரவில் மிதந்து வந்த 50 கிலோ கஞ்சா மூட்டையை மீனவர்கள் கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர்கள் நேற்று இரவு வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். தரைப்பகுதியில் இருந்து சுமார் 24 கிலோமீட்டர் தூரத்தில் வலைகளை வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கருப்பு மூட்டை ஒன்று தண்ணீரில் மிதந்து வந்துள்ளது. அதனை பார்த்த மீனவர்கள் அந்த கருப்பு மூட்டையை கைப்பற்றி கரைக்கு எடுத்து வந்தனர். பின்னர் இந்த மர்ம மூட்டையை பற்றி மரக்காணம் காவல் நிலையத்திற்கு மீனவர்கள் தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த மரக்காணம் இன்ஸ்பெக்டர் திவாகர், ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நள்ளிரவு நேரத்தில் சென்றனர். போலீசார் அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது மூட்டையில் 10 பொட்டலங்கள் இருந்துள்ளது. இந்த சிறிய பாக்கெட்டுகளை போலீசார் பிரித்துப் பார்த்த போது அதில் உயர்ரக கஞ்சா இருந்துள்ளது. உடனே போலீசார் அந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி மரக்காணம் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.
இந்த கஞ்சா பொட்டலங்கள் தண்ணீரில் நனைந்து இருந்ததால் அதன் எடை 50 கிலோ இருந்தது. ஆனால் காய்ந்த பிறகு இதன் எடை குறைய கூடும் என போலீசார் தெரிவித்தனர். இது வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் உயர் ரக கஞ்சா என்பதால் இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் எனவும் போலீசார் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தது யாராக இருக்கும் அவர்கள் போதை பொருள் கடத்தப்படும் மாபியா கும்பலா? இந்த கஞ்சாவை யாருக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தனர்? மேலும் படகில் எடுத்து வந்தபோதுகடலோர காவல்படையினர் ரோந்து வந்ததால் அவர்களை கண்டதும் கடலில் வீசிவிட்டு தப்பிச்சென்றார்களா? என்ற பல கோணங்களில் மரக்காணம் போலீசார் முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர்.