10வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை ரூ.15 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
*படகுகளுக்கு தொடர் ஓய்வு
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நேற்று 10வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் ரூ.15 கோடிக்கு மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டத்தில் முக்கிய தொழில்களில் ஒன்றாக மீன்பிடித் தொழில் விளங்குகிறது.
கடலூர், முடசல்ஓடை, அன்னங்கோவில் உள்ளிட்ட இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன. 219 விசைப்படகுகள், 1919 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகள், 890 துடுப்பு படகுகள் மூலம் சுமார் 14 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 21ம் தேதி கடலூரில் 17.9 சென்டி மீட்டர் மழை பெய்தது.
கனமழை, கடலில் சூறைக்காற்று, மோந்தா புயல் என தொடர்ச்சியான இயற்கை இடர்பாடுகளால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது. இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், சொத்திக்குப்பம், தாழங்குடா, தேவனாம்பட்டினம், ராசாபேட்டை, சித்திரைபேட்டை, தம்மனாம்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் தங்கள் சிறிய ரக பைபர் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் சுமார் ரூ.15 கோடி அளவிற்கு மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால், அசைவ பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், மோந்தா புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் நேற்று இரண்டாவது நாளாக 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.