மீனவர்களை தாக்கி கொள்ளை கடற்கொள்ளையர் அட்டூழியம்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர் சுனாமி குடியிருப்பில் இருந்து பைபர் படகில் கடந்த 1ம் தேதி உத்திராபதி (65), சூரியமூர்த்தி (55), வீரப்பன் (40), சுகேந்திரன் (20) ஆகிய 4 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று (3ம்தேதி) அதிகாலை 3 மணி அளவில் வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே 5 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்தபோது 2 ஸ்பீடு பைபர் படகுகளில் வந்த 7 கடற்கொள்ளையர், நாகப்பட்டினம் மீனவர்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 300 கிலோ எடையுள்ள மீன்பிடி வலையை அறுத்து எடுத்துச் சென்றனர்.
இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம். இதேபோல், அதிராம்பட்டினம் மதன் குமார் (27), மல்லிபட்டிணம் செல்லபாண்டி (42), ராமநாதபுரம் மாவட்டம் காவிரிபட்டினம் ஆல்பார்ட் (38) ஆகியோர் கடந்த 30ம் தேதி பதிவெண் இல்லாத பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர், கடந்த 1ம் தேதி கோடியக்கரைக்கு தெற்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது,
பைபர் படகில் வந்த இலங்கை தமிழ் பேசும் கொள்ளையர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் இவர்களை தாக்கி, செல்போன் -4, டார்ச் லைட்-4, 150 கிலோ மீன் ஆகியவற்றை பறித்ததோடு ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ மீன்பிடி வலையை வெட்டிவிட்டு, 40 லிட்டர் டீசலை கடலில் ஊற்றி சென்று விட்டனர். கடற்கொள்ளையர்கள் அட்டூழியத்தால் மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளது.