முதல் குரல்
ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு பிரிவு சமீபத்தில் அலுவலக குறிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பாணையின் மூலம் பகுதி பி.,யில் அறிவிக்கப்பட்ட அணு கனிமங்கள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் முதல் அட்டவணையில் பகுதி டி.,யில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் முக்கியமான மற்றும் அரிய வகை கனிமங்களின் அனைத்து சுரங்க திட்டங்களும் பொதுமக்கள் கருத்து கேட்பின் தேவையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தகைய அனைத்து திட்டங்களும் சம்பந்தப்பட்ட குத்தகை பகுதியின் அளவை கருத்தில் கொள்ளாமல் ஒன்றிய அளவில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அளவில் முதல் தலைவராக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். சுரங்கத் திட்டங்களுக்கு மக்களின் கருத்துகளை கேட்க தேவையில்லை என்ற முடிவை கைவிட வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், கடற்கரை மணல் அமைப்புகளில் அரியமண் கனிம கூறுகளின் படிவுகள் உள்ளது.
இந்த கடற்கரைகள் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. மன்னார்வளைகுடா மற்றும் பாக்விரிகுடாவின் மணற்கடற்கரைகள், அழிந்து வரும் ஆமைகளின் இனப்பெருக்கம், பவளப்பாறைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு தாயகமாக உள்ளது. அவை கடல்அரிப்பு மற்றும் சூறாவளி நிகழ்வுகளுக்கு எதிரான இயற்ைக கேடயங்களாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள், பல்லுயிரியலை நிலைநிறுத்துகிறது. கரையோரங்களை உறுதிப்படுத்துகிறது. கார்பனை பிரித்ெதடுக்கிறது. கடல் அரிப்புகளில் இருந்து சமூகங்களை பாதுகாக்கிறது.
இத்தகைய பகுதிகளில் சுரங்கம் என்பது இயல்பாகவே சுற்றுச்சூழல் பாதிப்புகளை கொண்டது. எனவே உள்ளூர் சமூகங்களின் முழுமையான ஈடுபாட்டுடன், கடுமையான ஆய்வும் தேவைப்படுகிறது. 1997ம் ஆண்டு திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு (1994) கட்டாய பொதுமக்கள் கருத்துகேட்புகளை அறிமுகப்படுத்தியது என்பதையும் நினைவு கூர்ந்து ெதளிவுபடுத்தியுள்ளார் முதல்வர். அதேநேரத்தில் மக்களின் பங்களிப்பு என்பது சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி, ஒரு மைல்கல்லாக திகழ்கிறது.
இந்த பாதுகாப்பு 2006ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (இஐஏ) அறிவிப்பில் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கோடிட்டு காட்டியுள்ளார். இவை அனைத்திற்கும் மேலாக பொதுமக்கள் கருத்து கேட்பிலிருந்து திட்டங்களுக்கு விலக்களிப்பு என்பது அவர்களுக்கு வாழ்வாதார இழப்பு, இடப்பெயர்ச்சி, சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான நியாயமான கவலைகளை எழுப்பும். உள்ளூர் சமூகங்களின் உரிமையை பறிக்கும். மிக முக்கியமாக மக்கள் ஜனநாயகத்தின் கொள்கைகளை பலவீனப்படுத்தும்.
எனவே இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மாற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். நெறிமுறைகளை பின்பற்றாமல் வெளியிடப்படும் இத்தகைய அறிவிப்புகள் கூட்டாட்சி உணர்வுக்கும், நமது நாட்டின் மக்களாட்சி தத்துவத்திற்கும் எதிரானதாக அமையும். இதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார் முதல்வர். அவரது முதல்குரல், மக்களின் குரலாக ஒன்றியத்தின் காதுகளில் எட்டவேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகமேம்பாட்டு அமைப்புகளின் எதிர்பார்ப்பு.