முதல் டெஸ்டில் தெ.ஆ. சாதனை வெற்றி; சொந்த மண்ணில் நொந்த இந்தியா: 15 ஆண்டுக்கு பின் மோசமான தோல்வி
கொல்கத்தா: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 15 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக 30 ரன் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது. டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளது. அந்த அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 14ம் தேதி கொல்கத்தா நகரின் ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது.
முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 159 ரன்களும், இந்தியா 189 ரன்களும் எடுத்து ஆல் அவுட்டாகின. பின்னர், 2ம் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்கா 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 93 ரன் எடுத்திருந்தது. கேப்டன் டெம்பா பவுமா 29, கோர்டன் பாஷ் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதி இருந்ததால் இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்கள் மத்தியில் பரவலாக காணப்பட்டது. இந்நிலையில், நேற்று 3ம் நாள் ஆட்டம் துவங்கியது.
ஆடுகளம் மோசமாக இருந்தபோதும் டெம்பா பவுமா சோதனைகளை சாமர்த்தியமாக எதிர்கொண்டு கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 ரன் எடுத்தார். கோர்பின் பாஷ் 25 ரன்னில் அவுட்டானார். சைமன் ஹார்மர் 7, கேசவ் மஹராஜ் 0 ரன்னில் விக்கெட்டுகளை இழந்ததால், தென் ஆப்ரிக்கா 54 ஓவரில் 153 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதையடுத்து, 124 ரன் இலக்குடன் இந்தியா 2ம் இன்னிங்சை துவக்கியது.
அற்புதமாக பந்து வீசிய துவக்க பந்து வீச்சாளர் மார்கோ யான்சன், இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ரன் எடுக்காமலும், கே.எல். ராகுலை 1 ரன்னிலும் அவுட்டாக்கினார். பின் வந்த வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் ஆடி 31 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். கழுத்தில் சுளுக்கு காரணமாக கேப்டன் சுப்மன் கில் ஆட வராதது இந்திய அணிக்கு பின்னடைவாக காணப்பட்டது.
அடுத்து வந்த துருவ் ஜுரெல் 13, ரிஷப் பண்ட் 2, ரவீந்திர ஜடேஜா 18, அக்சர் படேல் 26, குல்தீப் யாதவ் 1, முகம்மது சிராஜ் 0 ரன்னில் விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி 93 ரன்னில் சுருண்டது. அதனால், 15 ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் இந்திய அணி 30 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. தென் ஆப்ரிக்கா தரப்பில் சைமன் ஹார்மர் 4, மார்கோ யான்சன், கேஷவ் மஹராஜ் தலா 2, அய்டன் மார்க்ரம் 1 விக்கெட் எடுத்தனர். இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கவுகாத்தியில் 22ம் தேதி துவங்குகிறது.
* முதலும் கோணல் முடிவும் கோணல்
இந்திய அணியின் 2ம் இன்னிங்சில் முதல் 2 விக்கெட்டுகள் 1 ரன் எடுப்பதற்குள் வீழ்ந்தன. முதல் ஓவரை வீசிய யான்சன், 4வது பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ரன் எடுக்காமல் ஆட்டமிழக்க செய்தார். தொடர்ந்து 3ம் ஓவரை வீசிய அவர், மற்றொரு துவக்க வீரர் கே.எல்.ராகுலை 1 ரன்னில் அவுட்டாக்கினார். 1 ரன்னில் 2 விக்கெட்டுகள் பறிபோனதால் ஸ்தம்பித்த இந்திய அணி திக்கு தெரியாமல் தவித்தது.
அதை சாதகமாக பயன்படுத்திய தென் ஆப்ரிக்கா பவுலர்கள் இந்திய அணியை திணறடித்து விக்கெட்டுளை பறித்தனர். அதன் தொடர்ச்சியாக 35வது ஓவரை வீசிய தென் ஆப்ரிக்காவின் கேசவ் மஹராஜ், ஓவரின் 5வது பந்தில், அக்சர் படேலை சாய்த்தார். அதைத் தொடர்ந்து அடுத்த பந்தை துல்லியமாக வீச, முகம்மது சிராஜ் பேட்டில் பட்டு, அய்டன் மார்க்ரம் கையில் விக்கெட்டாக மாறியது. அதையடுத்து, இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
* 8 விக்கெட் சாய்த்து சைலன்ட் ஆக்கிய சைமன்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் முதல் இன்னிங்சில் 30 ரன்கள் மட்டும் தந்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின் 2வது இன்னிங்சில் 124 ரன் என்ற எளிய இலக்குடன் ஆடிய இந்திய அணியை துல்லிய பந்து வீச்சால் திணறடித்த சைமன் வெறும் 21 ரன்கள் மட்டும் தந்து 4 விக்கெட்டுகளை பறித்தார்.
இதனால் நிலைகுலைந்த இந்திய அணி 2வது இன்னிங்சில் 93 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 30 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 2 இன்னிங்ஸ்களிலும் அட்டகாசமாக பந்து வீசி 8 விக்கெட்டுகளை சாய்த்த சைமன் ஹார்மர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.