நடப்பு சீசனில் முதல் தொடர்: துலீப் கோப்பை கிரிக்கெட் வரும் 28ம் தேதி துவக்கம்; செப்.11ல் இறுதி போட்டி
புதுடெல்லி: இந்தியாவில் விளையாடப்படும் உள்நாட்டு கிரிக்கெட் சீசனின் முதல் தொடரான, துலீப் கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியாகி உள்ளது. நடப்பு 2025-26ம் ஆண்டுக்கான உள்நாட்டு கிரிக்கெட் சீசனின் முதல் தொடராக, துலீப் கோப்பை போட்டிகள் ஆடப்படுகின்றன. இப்போட்டிகள், வரும் 28ம் தேதி துவங்கி, செப். 15ம் தேதி நிறைவு பெறுகின்றன. இதில், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய மற்றும் வடகிழக்கு என ஆறு மண்டலங்களாக அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். அனைத்து போட்டிகளும், பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சென்டர் ஆப் எக்சலன்ஸ் விளையாட்டு அரங்குகளில் நடைபெறும். கடந்த, 2023 சீசன் இறுதிப் போட்டியில் ஆடிய தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகின்றன.
வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை இரு காலிறுதிப் போட்டிகள் நடைபெறும். முதல் காலிறுதிப் போட்டியில் வடக்கு மண்டலம் - கிழக்கு மண்டலம் அணிகள் மோதுகின்றன. 2வது காலிறுதிப் போட்டியில் மத்திய மண்டலமும், வடகிழக்கு மண்டலமும் மோதுகின்றன. முதல் காலிறுதியில் வெற்றி பெறும் அணி, செப். 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடக்கும் போட்டியில் தெற்கு மண்டலத்துடன் அரை இறுதிப் போட்டியில் களமிறங்கும். 2வது காலிறுதியில் வெல்லும் மற்றொரு அணி, 2வது அரை இறுதியில் மேற்கு மண்டலத்துடன் போட்டியிடும். இறுதிப் போட்டி, செப். 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை 5 நாள் போட்டியாக நடைபெறும்.
துலீப் கோப்பை போட்டி அட்டவணை
போட்டி தேதி அணிகள்
காலிறுதி 1 ஆக.28-31 வடக்கு மண்டலம் - கிழக்கு மண்டலம்
காலிறுதி 2 ஆக.28-31 மத்திய மண்டலம் - வடகிழக்கு மண்டலம்
அரையிறுதி 1 செப்.4-7 தெற்கு மண்டலம் - வெற்றியாளர் 1
அரையிறுதி 2 செப்.4-7 மேற்கு மண்டலம் - வெற்றியாளர் 2
இறுதிப்போட்டி செப்.11-15 முடிவாகவில்லை