முதல் இன்னிங்சில் ஆஸி 511 ரன்: இன்னிங்ஸ் தோல்வியை இங்கிலாந்து தவிர்க்குமா? 2வது டெஸ்டிலும் தொடரும் சோகம்
பிரிஸ்பேன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமாக வென்ற நிலையில், 2வது டெஸ்ட், பிரிஸ்பேனில் கடந்த 4ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 334 ரன் எடுக்க, ஆஸ்திரேலியா 2ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 378 ரன் எடுத்திருந்தது. அதைத் தொடர்ந்து 3ம் நாளான நேற்று, 117.3 ஓவரில் ஆஸி 511 ரன் விளாசி ஆல் அவுட்டானது. ஆஸி, 177 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை ஆடியது. ஆஸி வீரர்களின் துல்லிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கி வீரர்கள் விக்கெட்டுகளை எளிதில் பறிகொடுத்தனர். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து 35 ஓவரில் 6 விக்கெட் இழந்து 134 ரன் எடுத்திருந்தது. இன்னும் 43 ரன்கள் பின்தங்கிய நிலையில், 4ம் நாளான இன்று, இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடர உள்ளது. 2 நாள் ஆட்டம் முழுமையாக உள்ளதால் ஆஸி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.