பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் பலி
ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கங்கர்செவல்பட்டியில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேன்சிரக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மதியம் வழக்கம் போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து உராய்வின் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 2 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கவுரி(50) உயிரிழந்தார். 6 பேர் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கோமாளிப்பட்டியை சேர்ந்த காளிமுத்து(45) உயிரிழந்தார். இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிந்து, போர்மேன் சோமசுந்தரத்தை கைது செய்தனர்.
ரூ.4 லட்சம் நிதி: இந்நிலையில், உயிரிழந்த கெளரியின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.