பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்ட வழக்கு விசாரணை காற்று மாசு விவகாரத்தில் நாடு முழுவதும் ஒரே கொள்கை வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து
புதுடெல்லி: டெல்லி மற்றும் என்.சி.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கூறியதில்,‘‘ஒரு கொள்கை கொண்டு வரப்பட்டால் அது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமே தவிர, டெல்லிக்கு மட்டும் தனிக் கொள்கை என்றெல்லாம் இருக்க கூடாது. ஏனென்றால் பிற பகுதிகளை சேர்ந்த மக்களை போல் டெல்லியை சேர்ந்தவர்களும் இந்நாட்டின் மக்கள் தான் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இவை மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு குளிர் காலத்தின் போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தான் இருந்தேன், அப்போது அங்கு டெல்லியை விட மிகவும் மோசமான காற்று மாசு இருந்தது. காற்று மாசுவுக்காக பட்டாசுகளை தடை செய்ய வேண்டும் என்றால், அவை நாடு முழுவதும் தடை செய்யப்பட வேண்டும். மேலும் ஒன்றிய காற்றுத் தர மேலாண்மை ஆணையத்திடமிருந்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் இதுதொடர்பாக ஒரு அறிக்கையை பெற வேண்டும்’’ என்றார்.