தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு 2 நாளில் 50,000 பேர் பங்கேற்பு: தீயணைப்பு துறை டிஜிபி சீமா அகர்வால் தகவல்
சென்னை: தமிழகம் முழுவதும் 375 தீயணைப்பு நிலையங்களில் நடைபெற்ற தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பில் கடந்த 2 நாட்களில் 50 ஆயிரம் பேர் பங்கேற்றதாக தீயணைப்பு துறை டிஜிபி சீமா அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். தீ பாதுகாப்பு விழிப்புணர்வினை பொதுமக்களிடையே பரப்புவதற்காக ‘வாங்க காற்றுக்கொள்ளவோம்’ என்ற ஒரு முயற்சியை தீயணைப்பு துறை டிஜிபி சீமா அகர்வால் முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.
அதன்படி, பொதுமக்களை அருகிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு அழைத்து அத்தியாவசிய தீப்பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் இவ்விழிப்புணர்வு திட்டம் வடிவமைக்கப்பட்டன. இம்முயற்சியின் ஒரு பகுதியாக, மாநில முழுவதுமுள்ள 375 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களில் உள்ள பணியாளர்கள் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நிலையங்களில் தீ குறித்த விழிப்புணர்வு வகுப்புகள் பொதுமக்களுக்காக நடந்தப்பட்டன.
இந்த 2 நாட்களும் காலை, மதியம் மற்றும் மாலை என 3 வகையான இடைவெளியில் தீயணைப்பு நிலையங்களுக்கு தன்னார்வமாக வரும் பொது மக்கள், இளைஞர்களுக்கு தீ விபத்துக்கள், தீயணைக்கும் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு கல்வியும், எலக்ட்ரிக் தீ விபத்து, பேரிடர் கால விபத்து மீட்பு நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு கல்வி இலவசமாக வழங்கப்பட்டன. அதன்படி,நேற்று முன் தினம் 24,947 மற்றும் நேற்றைய தினம் 24,156 என ஒட்டுமொத்தமாக 49,103 பேர் பங்கேற்றதாக தீயணைப்பு துறை டிஜிபி சீமா அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.