நெஞ்சில் நெருப்பை கட்டிக்கிட்டு இருந்த சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘அத்துமீறும் வாகனங்களால் யூனியன் வாசிகள் ரொம்பவே அவதிப்படுறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘மதுவுக்கு பெயர் போன புதுச்சேரியில் வெளிமாநில வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்தபடி இருக்கிறதாம்.. சமீபத்தில் சுற்றுலா பகுதியான படகு குழாம் அருகிலுள்ள பாலத்தில் பைக்கில் வாலிபர் மெதுவாக செல்ல, விதிகளை மீறி அதிவேகமாக வந்த கார் மின்னல் வேகத்தில் வந்து மோத, ஆற்றுக்குள் தூக்கி வீசப்பட்டு அப்பாவி உயிரே பறிபோனதாம்.. சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி அடுத்த சில மணிநேரத்தில் வலைதளத்தில் வைரலாக உள்ளூர்வாசிகளோ கடும் கொந்தளிப்பில் உள்ளார்களாம்.. ஏற்கனவே வெளிமாநில இளசுகளின் அத்துமீறல்கள், வாகன நெரிசல்கள் வாராந்திர தொல்லையாகிவிட, தற்போது எல்லைமீறிய போதையால் தாறுமாறான போக்குவரத்தாலும் அவதியுறும் நிலை உருவாகி இருக்கிறதாம்.. சிக்னல்களிலும் வெளியூர் வாகனங்கள் அத்துமீற விபத்துகள் தொடர்கதையாகி வருகிறதாம்.. இதற்கு கடிவாளம் போடுவதுதான் யார் என்ற கேள்வியை முன்னெடுத்துள்ள உள்ளூர்வாசிகளோ, இனியும் கடும் நடவடிக்கைகள் எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடும் முடிவில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நெஞ்சில் நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தாராமே இலைக்கட்சி தலைவர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கதர்கட்சியில் இருந்து பிரிந்துபோய், தந்தை தொடங்கி, கலைத்த கட்சியை மீண்டும் நடத்தி வராரு தஞ்சாவூர்காரர்.. இவரு இலைக்கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது மேல்சபை எம்பி பதவியை கொடுத்து இலைக்கட்சி அழகு பார்த்ததாம்.. ஆனால் அவரோ, திடீரென மலராத கட்சியின் பக்கம் போயிட்டாராம்.. இதனால் கோபத்தின் உச்சத்தில் இருந்த இலைக்கட்சி தலைவர், கோபத்தை நெஞ்சில் அடக்கி வச்சிருக்காராம்.. அவருக்கு பக்கபலமாக இருக்கும் ஈரோட்டு ராஜாவை, தன்பக்கம் இழுக்கும் வேலையை தொடங்கினாராம்.. அவரும் கதர்சட்டைக்காரரை கைகழுவி விட்டு வெளியேறவும் தயாராக இருக்காராம்.. இந்த சூழலில் 10 ஆண்டுகளாக எந்த சிந்தனையும் இல்லாத நிலையில், திடீரென தந்தைக்கு நினைவேந்தல் கூட்டத்தை கூட்டி அரசியலில் புத்துணர்ச்சியுடன் இறங்க திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்காரு தஞ்சாவூர்காரர்.. டெல்லியுடன் நெருக்கமாக இருந்து, காவடி தூக்குவதால் டெல்லி நிதியும் வந்ததாம்.. இந்த நிகழ்ச்சியில் இலைக்கட்சி தலைவரும் கலந்துக்கிட்டாராம்... அதே நேரத்துல இலைக்கட்சி தலைவரால் பதவி பறிக்கப்பட்ட மாஜி போலீஸ்காரரும் கலந்திருக்காரு.. ரெண்டு பேருக்கும் இடையே இருக்கும் கோபம் நீறு பூத்த நெருப்பாத்தான் இருக்குதாம்.. சமயம் வரும்போது சும்மா விடமாட்டேன் என மாஜி போலீஸ்காரரும், இனிமேல் தமிழ்நாட்டில் எந்த பதவியையும் கிடைக்க விடமாட்டேன் என இலைக்கட்சி தலைவரும் நெஞ்சில் நெருப்பை கட்டிக்கிட்டு இருந்தாங்களாம்... ரெண்டுபேரும் வணக்கம் செலுத்திக்கிட்டாலும் பேசவே இல்லையாம்.. இந்நிலையில், திடீரென இலைக்கட்சி தலைவர் கூட்டத்திலிருந்து புறப்பட்டு போயிட்டாராம்.. இந்த காட்சியை கதர்சட்டைக்காரங்க ரொம்பவே புகழ்ந்து பேசுறாங்க.. ஒன்றிய நிதி மந்திரி இருக்கும் கூட்டத்திலிருந்து அதிரடியாக சென்றதை பார்க்கும்போது, கூட்டணி கட்சிக்கு தான்தான் தலைவர் என்பதை நிரூபிச்சிக்கிட்டு போனாருன்னு சிலிர்க்கும் வகையில் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘முதல்வர் வேட்பாளரை சொல்ல மறுப்பதுடன் கூட்டணி ஆட்சிதான் என்று உள்துறையானவர் திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருக்க காரணம் என்ன..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் சுற்றுப்பயணத்திற்குள் இவ்வளவு பெரிய விஷயம் இருப்பதாக அவருக்கு நெருங்கிய அடிபொடிகள் சொல்றாங்க.. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில், திடீரென உலகத்தை மீட்க போறேன்னு இலைக்கட்சி தலைவர் சொன்னதோடு மட்டுமல்லாமல், புறப்பட்டு புயல் வேகத்துல போய்கிட்டிருக்காராம்.. இதுக்கும் ஒரு காரணம் இருக்காம்..
மலராத கட்சியுடன் கூட்டணி சேர்ந்தவர்கள் யாரும் கரையேறியது கிடையாது.. நம்மூரை எடுத்துக்கொண்டால் கூட, தேனிக்காரர் கதையை பார்க்கலாம்.. இலைக்கட்சியின் கரைவேட்டி கூட கட்டமுடியாத நிலையில் இருப்பதுடன், பலாப்பழ சின்னத்தில் இலைக்கட்சியையே எதிர்த்து போட்டியிட வச்சிட்டாங்க.. இதனால அவரது எம்எல்ஏ பதவி கூட பறிபோகும் நிலை ஏற்பட்டிருக்கு.. அதோட அவருக்கு ஓட்டு கேட்டுப்போன இன்னும் ரெண்டு எம்எல்ஏக்களின் கதையும் இப்படித்தான் அந்தரத்தில் தொங்குதாம்.. எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கு..
இந்நிலையில் மலராத கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால், நம்மையே இல்லாமல் ஆக்கிவிடுவார்கள் என்ற சந்தேகமும் இருக்குதாம்.. தேனிக்காரருடன் தொடர்பில் இருக்கும் டெல்லி மேலிடம், அவரை கட்சிக்குள் சேர்த்துவிடவும் காய் நகர்த்தி வருதாம்.. இதற்காகவே கூட்டணியில் சேர்ந்த பிறகும், முதல்வர் வேட்பாளர் நான்தான் என சொல்ல மறுப்பதுடன், கூட்டணி ஆட்சி அமையுமுன்னு ஒன்றிய உள்துறை மந்திரி சொல்லிக்கிட்டே இலைக்கட்சி தலைவருக்கு இனிமா கொடுத்துக்கிட்டு இருக்காராம்.. இதன்மூலம் தேனிக்காரரை உள்ளே கொண்டு வந்து, தன்னை பின்தள்ள திட்டமிட்டுள்ளதும் இலைக்கட்சி தலைவருக்கு தெரியவந்துள்ளதாம்.. இதனை முறியடிக்கும் வகையில், இப்போதே இலைக்கட்சியில் நான்தான் தலைவர், நான் தான் முதல்வர் வேட்பாளராக இருக்கேன்னு சொல்லி, மக்கள் மத்தியில் தன்னை அறிமுகம் செய்வதுடன், அவர்கள் மனதில் இடம்பிடிக்க வைக்கும் வேலையில் இறங்கியிருக்காராம்.. முதல்வர் என்பது கனவில் கூட முடியாத காரியமாக இருந்தாலும், எதிர்கட்சி தலைவர் என்றாலும் நான்தான் இருப்பேன் என சொல்வதற்காகத்தான், ஊர் ஊராக சுற்றிவருவதாக கட்சிக்காரங்க சொல்றாங்க... அதே நேரத்துல கோபத்துல வெளியே வந்த தேனிக்காரரும், மீண்டும் இணைய ஆசைஆசையா இருக்காராம்..’’ என்றார் விக்கியானந்தா.