ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ: 6 நோயாளிகள் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையின் உள்ள நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ, வேகமாகப் பரவியதால் அங்கு புகை மண்டலம் சூழ்ந்தது. இதில், ஏற்கெனவே கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீ விபத்தைத் தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளின் உறவினர்களும் இணைந்து சிகிச்சை பெற்று வந்த மற்ற நோயாளிகளை பத்திரமாக மீட்டு வெளியேற்றினார். தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கெர்ணடு வந்தனர். தீ விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார். மேலும் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மருத்துவமனையில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடிஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.