திருப்பூரில் இன்று அதிகாலை பட்டாசு கடையில் தீ விபத்து
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் திருப்பூர்-கொங்கு மெயின் ரோடு பகுதியில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடையை வைத்துள்ளார். இன்று அதிகாலை அவரது கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்ததும் கடையிலேயே தங்கியிருந்த கடை உரிமையாளர் முருகேசன் வெளியே வந்தார். அதற்குள் தீ வேகமாக பரவியது. பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் எரிய துவங்கியது. பட்டாசுகள் வெடித்து சிதறியதால், தீ மளமளவென வேகமாக பரவி பற்றி எரிந்தது.
இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் முருகேசன் பல லட்சம் மதிப்பிலான பட்டாசு மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்காக வாங்கி இருப்பு வைத்திருந்துள்ளார். அவை தீ விபத்தில் சேதமடைந்துள்ளன. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என தெரிகிறது. தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.