தீயணைப்பு துறையில் வேண்டாத அதிகாரிகளை சிக்க வைக்க நடந்த முயற்சி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘சிறைக்குள்ளார இரண்டாம் முறையா டிரோன் விழுந்த சம்பவம் தொடர்பாக மக்களுக்கு பெரிய சந்தேகம் எழுந்திருக்கிறதா பேசிக்கிறாங்களே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல இருக்குற ஜெயில்ல எப்பவுமே பரபரப்புக்கு பஞ்சமில்லை, புகார்களுக்கும் குறைவில்லை.. இந்த முறை 2வதாக மீண்டும் பரபரப்பை கிளப்பியிருக்குது டிரோன் மேட்டர்.. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னாடி வெயிலூர் சிறைக்குள்ளாக ஒரு டிரோன் கேமரா பறந்து வந்து விழுந்துச்சு.. காக்கிகள் விசாரணை நடத்தி வந்தாங்க.. இப்ப சில மாதங்களுக்கு பிறகு போன வாரம் திரும்பவும் டிரோன் கேமரா சிறைவளாகம் 1வது கண்காணிப்பு கோபுரத்துக்கு பக்கத்துல விழுந்திருக்குது.. இப்படி சிறைக்குள்ள அடிக்கடி டிரோன் வந்து விழுறதுக்கு பின்னாடி கஞ்சா, செல்போன் கடத்தி சப்ளை செய்ற பெரிய நெட்வொர்க் செயல்படுதான்னு ஜனங்க மத்தியில பெரிய சந்தேகம் எழும்பி இருக்கு... காரணம், ஏற்கனவே விழுந்த டிரோன் எங்கிருந்து, யார் பயன்படுத்தியதுன்னு விடைதெரியாம போச்சு.. இப்ப 2வதாக விழுந்த டிரோன் விவரமும் வெளிச்சத்துக்கு வராம இருக்குது.. இதனால சிறைத்துறையோட உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி உடனே நடவடிக்கை எடுக்கணும்னு எதிர்பார்ப்பு எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சியினரை தோற்கடிக்க வேண்டும் என்பதில் மட்டுமல்லாமல் டெபாசிட் கூட வாங்க விடக் கூடாது என்பதில் குக்கர் கட்சியினர் தீவிரமாக இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குக்கர் கட்சியினர் மற்ற மாவட்டத்தில் எப்படியோ, லிங்கசாமி பெயர் கொண்ட நதி மாவட்டத்தில் ரொம்பவே ஸ்பீடா இருக்காங்க... இந்த மாவட்டத்தில் அந்தக்கட்சி சார்பில் அடிக்கடி கூட்டம் நடந்து வருது... கூட்டத்தில் இலை தரப்பு தலைமை உள்பட முக்கிய பிரமுகர்களை சகட்டு மேனிக்கு வசைபாடுவதை மட்டும் மறப்பதில்லையாம்.. மாவட்டத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், இலைக்கட்சியினரை தோற்கடிக்க வேண்டும். டெபாசிட் கூட வாங்க விடக்கூடாது என்று கூறி, அதற்காக பெரிய அளவில் திட்டமும் தீட்டி வர்றாங்களாம்... முதல்கட்டமாக கிராமம், கிராமமாக சென்று இலைதரப்பிற்கு எதிரான வேலைகளை செய்து வர்றாங்களாம்.. பலாப்பழக்காரர் ஆதரவாளர்கள் கூட சைலண்டா இருக்காங்க... குக்கர்காரங்க ஏம்பா இப்படி வயலன்டா இருக்காங்க... கொஞ்சம் பேசி ஏதாவது கரெக்ட் பண்ணுங்கப்பா... ஏற்கனவே மாவட்டத்தில் டவுன்ல போய்க்கிட்டிருக்கோம் என தலைமை தரப்பினர், மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசியிருக்கின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மது ஆலை அனுமதி விவகாரத்தில் சிபிஐ கிடுக்கிப்பிடியால் கலால் துறை அதிர்ச்சியில் இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மதுவுக்கு பெயர்போன புதுச்சேரி யூனியனில் ரெஸ்ட்டோ பார்கள் தாராளமானதாம்.. நள்ளிரவு அத்துமீறல்கள் அதிகரிக்கவே பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசிகள் பிரச்னையை பூதாகரமாக்க ஆளும்தரப்பு சில கெடுபிடிகளை முன்வைத்ததாம்.. பெயரளவில் இதை கடைபிடித்த ரெஸ்ட்டோ தரப்ேபா மீண்டும் ஆட்டத்தை கண்டுகொள்ளவில்லையாம்.. நிலைமை இப்படியிருக்க, மேலும் மது ஆலைக்கு அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகியிடம் முறையிட்டிருந்த புல்லட்சாமியோ, அது தாமதமாக அப்செட்டில் இருந்தாராம்.. கூட்டணி குடைச்சல் கொடுக்கவே டெல்லி பவுர்புல் நிர்வாகியை சைலண்ட் ஆக்கியதாம்.. பதிலுக்கு சிபிஐ டீமை ராஜ்நிவாஸ் அனுப்பி சில துருப்புச் சீட்டுகளை பெற்றதாம்.. தற்போது மதுஆலை விவகாரம் தொடர்பாக கலால் அதிகாரிகளிடம் ரகசிய விசாரணையில் இறங்கியுள்ளதாம் சிபிஐ.. ஏற்கனவே யார் யாருக்கு, எந்தெந்த அடிப்படையில் அனுமதி கொடுத்தீர்கள் என கிடுக்கிப்பிடி போட, கலால்துறை தரப்போ அதிர்ச்சியில் உள்ளதாம்.. இதன் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமோ என்ற சலசலப்பு கலால் வட்டாரத்தில் நிலவுதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரெட்போர்ட் அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதா இலைக்கட்சி நிர்வாகிங்க ஏக சந்தோஷத்தில் குதிக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மஞ்சள் மாவட்டத்துல ரெட்போர்ட் போட்டியிட்ட தொகுதியை சேர்ந்த இலைக்கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்துல இருக்கிறார்களாம்.. தொகுதியில் இலைக்கட்சியின் ஒற்றை முகமாக தன்னை முன்னிலை படுத்தி வந்த ரெட்போர்ட் 8 முறை அதே தொகுதியில் தொடர்ச்சியா போட்டியிட்டு வந்ததால அந்த தொகுதியை இலைக்கட்சி நிர்வாகிகள் ேவறு யாரும் எலக்சனில் சீட் கேட்டு தலைமைக்கு விண்ணப்பிக்க முடியாம இருந்து வந்தது.. யாராவது சீட் கேட்டு விண்ணப்பித்தால் அவர்களை ஓரம் கட்டும் வேலையை கச்சிதமாக ரெட்போர்ட் செய்து வந்ததால் நமக்கு ஏன் வீண் வம்பு என்று நிர்வாகிகள் இருக்கின்ற இடமே தெரியாம இருந்து வந்தாங்க.. சமீபத்துல இலைகட்சியில் இருந்து ரெட்போர்ட் நீக்கப்பட்டாலும் ஒருங்கிணைப்பு, மனம் திறப்பு, சந்திப்பு என தினந்தோறும் டயலாக் கூறி வந்ததால் ஒரு வேளை மீண்டும் இலைக்கட்சியில் சேர்க்கப்பட்டுவிடுவாரோ என்ற கவலை அந்த தொகுதியை சேர்ந்த 2ம் கட்ட நிர்வாகிகளுக்கு இருந்து வந்ததாம்.. அதனால பெரியதாக ரியாக்சன் எதையும் காட்டாம இருந்து வந்தாங்க.. இந்த சூழலில் நடிகர் கட்சியில் ரெட்போர்ட் ஐக்கியமாகிவிட்டதால இலைக்கட்சியில் ரெட்போர்ட் அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாம்.. இதனால் ரெட்போர்ட் தொகுதியில் இருக்கிற இலைக்கட்சி நிர்வாகிங்க ஏக சந்தோஷத்துல இருக்கிறாங்களாம்.. அதிலும் கடந்த காலங்களில் ரெட்போர்ட் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் எலக்சனில் சீட் வாங்கி ரெட்போர்ட்டை எதிர்த்து போட்டியிட்டே ஆகணும்னு தீவிரமா இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தீயணைப்பு துறை அதிகாரியின் அறையில் பணம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தை நாடப் போறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நெல்லையில தீயணைப்புத்துறை அதிகாரியின் அறையில் சமீபத்தில் பெரிய அளவில் பணம் எடுக்கப்பட்டது.. இதுதொடர்பாக விசாரணை நடத்தியதுல, தீயணைப்புத் துறையில் பணியாற்றும் ஒரு காவலர் உள்பட ரெண்டு பேரு சேர்ந்து பணத்தை உள்ளே வைச்சிட்டதா குற்றச்சாட்டுகள் எழுந்தது.. இதுகுறித்து, காக்கிகள் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தாங்க.. இந்த வழக்கில தங்களுக்கு வேண்டாத சில உயர் அதிகாரிகளை சிக்க வைக்கும் எண்ணத்துல நெல்லையில உள்ள சிலரே முயற்சிக்கிறாங்களாம்.. நெல்லை காக்கிகளும் கைது செய்யப்பட்ட காவலரை சிலரது பெயரை சொல்லும்படி கடுமையாக தாக்கியதாக சொல்றாங்க.. இதனால, அவங்க இது குறித்து மனித உரிமை ஆணையத்துல புகார் தெரிவிக்க உள்ளார்களாம்.. மேலும், வழக்கை சிபிஐக்கு மாற்றணும்னு உயர் நீதிமன்றத்தையும் நாட உள்ளார்களாம்.. ஒரு சின்ன விவகாரம், சில காக்கி அதிகாரிகளின் நெருக்குததால் திசை திரும்பும்னு பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.