நிதி மோசடி வழக்கில் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் 1 சென்ட் நிலம், 1 ரூபாய் குறைந்தாலும் கடும் நடவடிக்கை: தேவநாதன் யாதவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை: நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் தனது சொத்து விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஒரு சென்ட நிலம், ஒரு ரூபாய் மறைத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் மூன்றாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சொத்துக்களை முடக்குவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று உரிமையாளர்களிடமும், நிறுவனங்களிடமும் ஒப்புதல் பெற்று அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேவநாதன் யாதவ் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேவநாதன் யாதவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க கூடும் என்று பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, கடந்த ஓராண்டுக்கு மேலாக தேவநாதன் யாதவை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பொருளாதார குற்றப்பிரிவு வரலாற்றில் வழக்கை விரைந்து விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்த ஒரு வழக்கையாவது கூறுங்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, தேவநாதன் தரப்பில் தனக்கு குறைந்தது 6 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கினால் சொத்துக்களை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று கோரப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தனக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் ரொக்கங்கள் குறித்த விவரங்களை ஆகஸ்ட் 25ம் தேதி தேவநாதன் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இதில், ஒரு சென்ட் நிலம் அல்லது ஒரு ரூபாயை மறைத்தாலும் கூட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து, தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து அன்றைய தினம் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தார்.