நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு நிதியுதவி ஆணைகளை வழங்கினார் துணை முதலமைச்சர்
சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் கூடுதலாக 2,500 கலைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் நிதியுதவி ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 10 நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் சார்பாக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக நலிந்த கலைஞர்களுக்கு மாதம் தோறும் 3,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 6,542 நலிந்த கலைஞர்கள் மாதம் தோறும் 3,000 ரூபாய் நிதியுதவி பெற்று பயனடைந்து வருகின்றார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் நலிந்த கலைஞர்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், நிதியுதவி பெற விண்ணப்பித்துள்ள தகுதி வாய்ந்த அனைத்துக் கலைஞர்களுக்கும் நிதியுதவி வழங்கிடும் வகையில், 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இத்திட்டத்திற்காக கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்கள்.
அதனடிப்படையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தெரிவுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட. தகுதிவாய்ந்த 2,500 நலிவுற்ற நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கிட ஆணைகள் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , இன்று (5.9.2025) முகாம் அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்வில் நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் கூடுதலாக 2,500 கலைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் நிதியுதவி ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக 10 நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர். க.மணிவாசன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் திருமதி விஜயா தாயன்பன், அருங்காட்சியங்கள் துறை ஆணையர் மற்றும் கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கவிதாராமு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.