அரும்பாக்கம் பகுதியில் சிட்பண்ட் நடத்தி ரூ.2.4 கோடி மோசடி; நிதி நிறுவன இயக்குநர் உட்பட 2 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
சென்னை: அரும்பாக்கம் பகுதியில் சிட்பண்ட் நடத்தி பொதுமக்களிடம் ரூ.2.4 கோடி மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவனத்தின் இயக்குநர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த டில்லிபாபு(39). இவர் அரும்பாக்கம் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு ‘அச்சலிஸ் சிட்பண்ட் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடையே விளம்பரம் செய்தார். அதை நம்பிய பொதுமக்கள் பலர் டில்லிபாபுவின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். முதலீட்டு பணத்திற்கான முதிர்வு தொகையை கேட்ட போது, முறையாக பதில் சொல்லாமல், திடீரென நிதி நிறுவனத்தை மூடிவிட்டு நிதி நிறுவன இயக்குநர் டில்லிபாபு மற்றும் நிறுவனத்தில் பணியாற்றிய நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்படி விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு சீட்டு மற்றும் கந்து வட்டி புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த மாதம் 8ம் ேததி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், நிதி நிறுவனத்தை டில்லிபாபு மற்றும் தனது நண்பர்களான யுவராஜ், ஆனந்தன் ஆகியோர் இயக்குநர்களாக இருந்து தொடங்கியுள்ளார். மேலும் நிதி நிறுவனத்தின் கணக்கு மேலாளராக பணியாற்றிய வினோத்குமார் நியமித்து பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் 70க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2.4 கோடி வரை பணத்தை வசூலித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதைதொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தலைமறைவாக இருந்த வந்து நிதி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஆனந்தன்(48) மற்றும் நிதி நிறுவனத்தின் கணக்கு மேலாளராக இருந்து அரும்பாக்கத்தை சேர்ந்த வினோத்குமார்(32) ஆகியோரை மத்திய குற்றப்பரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி டில்லபாபு, யுவராஜ் ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.