நிதி நிறுவன அதிபர் வெட்டிக்கொலை
நாமக்கல்: நாமக்கல் அருகே நிதி நிறுவன அதிபரை வெட்டிக்கொன்ற 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஈச்சவாரி கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (40). இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் நாமக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்படவே, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.
மேலும், டெண்டர் எடுத்து உயர் மின்கோபுர விளக்கு பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில், நாமக்கல்லில் இருந்து முட்டை மற்றும் இறைச்சி வாங்கிக்கொண்டு, ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்றார். வீட்டுக்கு அருகில் சென்றபோது, சரக்கு ஆட்டோவில் காத்திருந்த 4 பேர் கும்பல், அருள்தாசை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். அணியாபுரம் கொங்களத்தம்மன் கோயில் அருகே சென்றபோது, சரக்கு ஆட்டோ நின்று விட்டது.
அதை அங்கேயே நிறுத்திவிட்டு, தப்பி ஓடி விட்டனர். இதனிடையே, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அருள்தாசை அங்கிருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி மோகனூர் போலீசார் விசாரணை நடத்தி, சரக்கு ஆட்டோவில் இருந்த அரிவாள், கத்திகளை பறிமுதல் செய்தனர். பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்னையில் அருள்தாஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. போலீசார் வழக்கு பதிந்து, 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.