43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: நிதி மசோதாவில் டிரம்ப் கையெழுத்து!
வாஷிங்டன்: அரசு நிதி மசோதாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அண்மையில் அமெரிக்க செனட் சபையில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா நிறைவேற 60 சதவீத வாக்குகள் தேவை. ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்ததால், நிதி மசோதா நிறைவேற்றப்படாததால், கடந்த 43 நாள்களாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது. நிர்வாகம் முடங்கியிருப்பது குறித்து ஜனநாயக கட்சியினருடன் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், தங்களது கட்சி நிலைப்பாட்டை மீறி, அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் சமரசம் செய்துகொள்ள சில ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் முன்வந்ததையடுத்து, இந்த மசோதா செனட் அவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஓவல் அலுவலகத்தில் செலவீனங்களுக்கான மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார். 43 நாட்களுக்கு அரசு நிர்வாகம் முடக்கம் முடிவுக்கு வந்தது. இது குறித்து பேசிய அதிபர் டிரம்ப், கடந்த 43 நாள்களாக, சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்காக கோடிக்கணக்கான டாலர்களைப் பறிக்க முயற்சித்த ஜனநாயகக் கட்சியினர், அமெரிக்க அரசை முடக்கினர்.
இன்று, மிரட்டி பணத்தை பறிப்பதற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்ற தெளிவான செய்தியை நாங்கள் சொல்ல விரும்புகிறோம் என்று கூறினார்.