பிப்.7ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை: அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தினை, இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்க்காணும் அட்டவணையின்படி அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் வரும் 3ம் தேதி வரை முன்னேற்பாடுகள், பயிற்சி, அச்சடித்தல், நவம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை கணக்கீட்டிற்கான காலம், டிசம்பர் 4ம் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலையங்களை மறுசீரமைத்தல், திருத்தியமைத்தல், டிசம்பர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை கட்டுப்பாட்டு அட்டவணையை மேம்படுத்துதல் மற்றும் வரைவுப் பட்டியலைத் தயாரித்தல், டிசம்பர் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் ஆகும்.
டிசம்பர் 9ம் தேதி முதல் 2026ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி வரை ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம், டிசம்பர் 9ம் தேதி முதல் 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை அறிவிப்பு கட்டம் (வழங்கல், விசாரணை மற்றும் சரிபார்ப்பு) கணக்கீட்டுப் படிவங்கள் மீதான முடிவுகள் மேற்கொள்ளுதல் மற்றும் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீர்வு காணுதல் ஆகியவை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு, இவை அனைத்தும் வாக்காளர் பதிவு அலுவலரால் முடிக்கப்பட வேண்டிய நாள் ஆகும். 2026ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதிக்குள் இறுதி வாக்காளர் பட்டியலின் தர அளவுகளை சரிபார்த்தல் மற்றும் இறுதி வெளியீட்டிற்கு ஆணையத்தின் ஒப்புதலைப் பெறுதல் வேண்டும். 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் ஆகும். இவ்வாறு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.