முதன் முறையாக பைனலில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்
துபாய்: 17வது ஆசிய கோப்பை டி.20 கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்றிரவு நடந்த சூப்பர் 4 சுற்று போட்டியில் பாகிஸ்தான்-வங்கதேச அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களே எடுத்தது. இதனால் 11 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்று பைனலுக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் ஹாகின்ஷா அப்ரிடி பேட்டிங்கில் 19 ரன், பவுலிங்கில் 3 விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கடந்த 1984ம் ஆண்டு முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 41 ஆண்டுகளில் ஆசியக் கோப்பை தொடர் 17 முறை நடத்தப்பட்டுள்ளது. இதில் இந்தியா அதிகபட்சமாக 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இலங்கை 6, பாகிஸ்தான் 2 முறை மகுடம் சூடி உள்ளது. ஆனால் இதில் ஒருமுறை கூட இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் விளையாடியது கிடையாது. தற்போது முதல் முறையாக வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் இறுதிபோட்டியில் நேருக்கு நேர் மோத உள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நடப்பு சீசனில் லீக் மற்றும்சூப்பர் 4 சுற்று என மோதிய 2 போட்டியிலும் இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.