திரைப்பட கலை இயக்குநர் தோட்டாதரணிக்கு செவாலியர் விருது
சென்னை: பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருது பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசு கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக செவாலியர் விருதை வழங்கி வருகிறது. இவ்விருதை தமிழ்நாட்டில் நடிகர் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்பட சிலர் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த விருது பிரபல திரைப்பட கலை இயக்குநர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அலையன்ஸ் பிரான்சைஸ் வளாகத்தில் நவ.13 அன்று ‘லா மேசான்’ (La Maison) என்ற ‘கஃபேநூலக’த்தை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ திறந்து வைக்கிறார். சென்னை மற்றும் புதுச்சேரி பிரான்ஸ் துணைத் தூதர் எத்தியென் ரோலான்-பியெக், அலையன்ஸ் பிரான்சைஸ் தலைவர் டி.கே.துர்கா பிரசாத், இயக்குநர் டாக்டர் பாட்ரிசியா தேரிஹார்ட் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். அந்த நிகழ்வில் தோட்டாதரணிக்கு செவாலியர் விருது வழங்கப்பட இருக்கிறது. கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, இவ்விருது வழங்கப்படுகிறது.