போராட்டம் வெல்லும்
பீகார் மாநிலத்தில் முதன்முதலாக எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தேர்தல் ஆணையத்தோடு இணைந்து பாஜ அரசு நடத்தும் கூட்டுச்சதி என ராகுல் காந்தி முதல் எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் எஸ்ஐஆர் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பின், நீக்கப்பட்ட பல வாக்காளர்கள் மீண்டும் இணைக்கப்பட்டனர். இருப்பினும், தகுதியான வாக்காளர்கள் பலர் நீக்கப்பட்டது தேர்தலில் பாஜ கட்சிக்கு பலமாகவே எதிரொலித்தது.
இடமாற்றம், இறப்பு, பெயர் குழப்பம், வாக்குச்சாவடி மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களை கூறி பலர் நீக்கப்படுகின்றனர். சொந்த வீட்டில் இருக்கும் ஒருவரே இந்த முறையில் பிரச்னையில்லாமல் பட்டியலில் இடம் பெறுகிறார். மற்றபடி, அடிக்கடி வாடகை வீடு மாறுபவர்கள் உள்ளிட்ட பலர் பிரச்னைகளை சந்திக்கின்றனர். இரண்டாம் கட்டமாக தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இதற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தமிழகத்தில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பருவமழை மற்றும் பனிப்பொழிவு தீவிரமாக இருக்கும். குறிப்பாக, ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் தை திருவிழாக்கள், ஐயப்பன், முருகனுக்கு மாலை போடுதல், திருவிழாக்கள் என பரபரப்பாக இருக்கும். இந்த சூழலில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டால், தேவையற்ற பனிச்சுமை என்பதோடு, பணிகளும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் டிட்வா புயல் தாக்கத்தால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை குறைவான மதுரை மாவட்டத்தில் கூட மழை பரவலாக பெய்து வருகிறது.
டெல்டா, நெல்லை மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழையால், பல லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி நாசமடைந்தன. மேலும், எஸ்ஐஆர் பணிகளை முடிப்பதற்கான கால அவகாசம் மிகக்குறைவு என்பதால், இப்பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் கடும் மன உளைச்சலில் சிக்கி தவித்தனர். குறிப்பாக, பிஎல்ஓ பணியில் ஈடுபடுவர்கள் பலருக்கு, வாக்காளர்கள் பலர் போனில் தொடர்பு கொண்டு பல சந்தேகங்களை கேட்பது, பலர் அவர்களிடம் சென்று வாக்குவாதம் செய்வது போன்ற பிரச்னைகளும் எழுந்தன.
இதனால் பணிகளில் தொய்வு ஏற்பட்டதோடு, பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்தன. இதுவரை 14 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்றுடன்(டிச.4) விண்ணப்ப படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் முடிவதாக இருந்தது. தற்போது இது டிச.11 வரை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி துவங்கியது. அன்றே எதிர்க்கட்சிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்தக் கோரி கடும் அமளியில் ஈடுபட்டன.
இதனால் முதல்நாளே மக்களவை முடங்கியது. 2வது நாளாக நேற்று முன்தினம் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. மாநிலங்களவையிலும் இவ்விவகாரம் எதிரொலித்தது. தொடர் அமளியால் பாஜ அரசு பணிந்து, டிச.10ம் தேதி இதுதொடர்பாக விவாதம் நடத்தலாமென கூறியுள்ளது. இது எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம், எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்பவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் தேவையற்ற நெருக்கடி ஏற்படுவதை ஒன்றிய அரசு உணர வேண்டும். தேர்தல் ஆணையமும் இதுதொடர்பான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்பதும் மக்களின் எண்ணமாகும்.