2026 பிபா உலகக்கோப்பை கால்பந்து முதல் முறையாக குட்டி நாடு தகுதி
ஆப்ரிக்கா: 2026 பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட முதன்முறையாக வெறும் 5.25 லட்சம் மக்கள்தொகை கொண்ட கேப் வெர்டே நாடு தகுதிபெற்று வரலாற்று சாதனை படைத்தது. 2026 பிபா உலகக்கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடந்து வருகிறது. இம்முறை 32 அணிகளுக்கு பதிலாக 48 நாடுகளின் அணிகள் பங்கேற்க இருக்கின்றன. ஆப்பிரிக்க தகுதிச் சுற்றில் எஸ்வதினியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, கேப் வெர்டே என்னும் குட்டி நாடு, முதல் முறையாக உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றிருக்கிறது.
இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகை 5.25 லட்சம் தான். இது டெல்லியின் மக்கள்தொகையில் 1.5 சதவீதம் மட்டுமே. ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள எரிமலை தீவுகளின் தீவுக்கூட்டம் தான், இந்த கேப் வெர்டே நாடு. 2018ம் ஆண்டில் ஐஸ்லாந்து இடம் பெற்றதற்கு பிறகு, உலகக்கோப்பை போட்டியில் இடம்பெறும் 2வது சிறிய நாடாக கேப் வெர்டே இடம் பிடித்துள்ளது.
வரலாற்று சாதனை தகுதியை பெற காரணமாக இருந்த எஸ்வதினி அணிக்கு எதிரான இப்போட்டியில், கேப் வெர்டேவின் டெய்லன் லிவ்ரமென்டோ, வில்லி செமெடோ, ஸ்டாப்பேஜ் ஆகியோர் கோல் அடித்து, தங்கள் நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். வெற்றிக்கு பின் ரசிகர்களுடன் இணைந்து தேசிய கொடியோடு, மைதானத்தில் உலகக்கோப்பை தகுதியை வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பிபா தலைவர் கியானி இன்பான்டினோ கூறுகையில், ‘‘என்ன ஒரு வரலாற்று தருணம். உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றதற்காக கேப் வெர்டேயில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் கொடி பறக்கும், உங்கள் கீதம் இதுவரை இல்லாத மிகப்பெரிய பிபா உலகக்கோப்பையில் ஒலிக்கும். கால்பந்து வளர்ச்சியில் உங்கள் பணி நம்பமுடியாததாக உள்ளது. உலகளாவியதாக மாறி கேப் வெர்டே முழுவதும் புதிய தலைமுறை கால்பந்து வீரர்களுக்கு சக்தி அளிக்கும் தருணம்’’ என்றார்.