ஃபிடே செஸ் தரவரிசை; பிரமாதம்... பிரக்ஞானந்தா: 4ம் இடம் பிடித்து சாதனை
லுசானே: கிளாசிகல் செஸ் போட்டிக்கான ஃபிடே தரவரிசைப் பட்டியலில், தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, வாழ்நாள் சாதனையாக, 4ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் முடிந்த சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டியில், பிரக்ஞானந்தா அபாரமாக ஆடி 2ம் இடம் பிடித்தார். இந்த போட்டி முடிவுகளை தொடர்ந்து, ஃபிடே, கிளாசிகல் செஸ் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. அப்பட்டியலில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா, 2785 இஎல்ஓ புள்ளிகளுடன் 4ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
பட்டியலில், நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 2839 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சக அமெரிக்க வீரர்கள் ஹிகாரு நகமுரா 2ம் இடத்திலும், பேபியானோ கரவுனா 3ம் இடத்திலும் உள்ளனர். இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசி, 2771 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும், இந்தியாவை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், 2767 புள்ளிகளுடன் 6ம் இடத்திலும் உள்ளனர். சின்கியுபீல்ட் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற, அமெரிக்க வீரர் வெஸ்லி ஸோ 7ம் இடத்தை பிடித்துள்ளார். மகளிர் கிளாசிக்கல் செஸ் தரவரிசைப் பட்டியலில், சீன வீராங்கனை ஹோ யிஃபான் முதலிடத்தில் உள்ளார். இந்திய கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பி, 6ம் இடத்தை பிடித்துள்ளார்.