பண்டிகை காலங்களில் பலகாரம் தயாரிப்பவர்கள் விதிமுறையை மீறினால் அபராதம்: உணவு பாதுகாப்புத்துறை
சென்னை: பண்டிகை காலங்களில் பலகாரம் தயாரிப்பவர்கள் விதிமுறையை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. உணவு தயாரிப்புக்கு தரமான எண்ணெய் மற்றும் நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருட்களை விற்பவர்கள் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உணவு பொட்டலங்களில் லேபிள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு விதிகள் குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை கடும் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பண்டிகைக் காலத்தில் விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால், தரத்தில் சிதைவு ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக கருதி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமல் விற்பனை செய்வது சட்டத்திற்குப் புறம்பானது. இது உணவு பாதுகாப்பு சட்டம் பிரிவு 31 மற்றும் 63-ன் கீழ் ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாக கருதப்படுகிறது.
இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்:
பால் மற்றும் பால் சாரா இனிப்புகள் தனித்தனியாக பேக்கிங் செய்யப்பட வேண்டும்.
தரமான எண்ணெய் மற்றும் நெய் மட்டுமே உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்பட வேண்டும்.
அனைத்து உணவுப் பொருட்களும் மூடிய நிலையில் வைத்திருத்தல் அவசியம்.
பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் உணவு பாதுகாப்பு லேபிள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
Gift Box-களிலும் உள்ள உணவுப் பொருட்களுக்கு சரியான லேபிள்கள் ஒட்டப்பட வேண்டும்.
உணவை கையாளும் பணியாளர்கள் அனைவரும் மருத்துவ சான்றிதழ் பெற்றவர்கள் ஆக இருக்க வேண்டும்.
வெற்றிலை, புகை, எச்சில் உமிழ்தல் போன்ற செயல்கள் உணவு தயாரிப்பு இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
பணியாளர்கள் அனைவரும் தலையுறை, கையுறை மற்றும் மேலங்கி அணிந்து இருக்க வேண்டும்.
அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது, பயிற்சி பெற்ற பொறுப்பாளர் ஒருவர் பதிலளிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது பொதுமக்கள் வாட்ஸ் அப் எண் 94440 42322 மூலமாகவும், TNFSD Consumer App மூலமாகவும் புகார்கள் தெரிவிக்கலாம்.
இந்த தீபாவளி காலத்தில் மக்கள் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், உணவு பாதுகாப்பு துறை மேற்கொண்டு வரும் இந்நடவடிக்கைகள் மிக முக்கியமானவை. அனைத்து வியாபாரிகளும் விதிகளை பின்பற்றி, தரமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.