தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்கு தேவையான அனைத்து உரங்களும் இருப்பில் உள்ளது
தேனி : தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்கு தேவையான அனைத்து உரங்களும் இருப்பில் உள்ளதாக குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி, வேளாண்மை இணை இயக்குநர் சாந்தாமணி, தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா முன்னிலை வகித்தனர். விவசாயத்திற்கானமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்மதி வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசுகையில், வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் நெல் விதை தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கிலோவிற்கு ரூ.20 மானியத்தில் ஒரு விவசாயிக்கு இரண்டு ஹெக்டேர் வரை வழங்கப்பட உள்ளது. அதேபோல் விதை கிராமத் திட்டத்தில் ஒரு கிலோவிற்கு ரூ.20 வீதம் ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.
மேலும், வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 110 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் 6 மெ.டன்னும் , தட்டை பயிறு, பாசிப்பயிறு மற்றும் உளுந்து உள்ளிட்ட பயறு வகை விதைகள் 22 மெட்ரிக் டன்னும், நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் 15 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1,247 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 920 மெட்ரிக் டன்னும் மற்றும் கலப்பு உரங்கள் 3,862 மெட்ரிக் டன்னும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வேளாண் அடுக்ககம் திட்டத்தில் வேளாண்மைத்துறை சார்ந்த அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் பிரதமரின் கவுரவ நிதி பெறும் 27 ஆயிரத்து 320 பயனாளிகளில் இதுவரை 21 ஆயிரத்து 434 விவசாயிகள் மட்டுமே பதிவுகள் மேற்கொண்டுள்ளனர்.
அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விரும்பும் அனைத்து விவசாயிகள் மற்றும் பிரதம மந்திரி விவசாயி நிதியினை தொடர்ந்து பெற விரும்பும் விவசாயிகளும் உடனடியாக சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவுகள் மேற்கொள்ளலாம். விவசாயிகளால் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
பின்னர், மீன்வளத் துறையின் மூலம் மீன் பண்ணை உரிமையாளர்கள் 5 நபர்களுக்கு இலவசமாக 12 ஆயிரம் திலேப்பியா வகை மீன் விரலிகளும் மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் 2024-25 திட்டத்தின்கீழ் 2 விவசாயிகளுக்கு 2 சிப்பம் கட்டும் அறைக்கான மானியத் தொகையாக ரூ.4 லட்சம் காசோலையினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.
இக்கூட்டத்தில் உதவி வனப் பாதுகாவலர் அரவிந்த், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சவுந்தர பாண்டியன், உதவி காவல் கண்காணிப்பாளர் ஜெரால்டு அலெக்சாண்டர் மற்றும் அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.