நீலகிாி மாவட்டத்தில் உள்ள உர விற்பனையாளர்கள் விற்பனை முனைய கருவியை பயன்படுத்த வேண்டும்
ஊட்டி : நீலகிாி மாவட்டத்தில் உள்ள உர விற்பனையாளர்கள் விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே உர விற்பனை மேற்கொள்ள வேண்டும் என வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் சுமார் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயமும், 7500 ஹெக்டர் பரப்பளவில் மலை காய்கறி விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது. தேயிைலை மற்றும் காய்கறி விவசாயத்திற்கு தேவையான யூரியா, டிஏபி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளெக்ஸ் உரங்கள் நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள 250க்கும் மேற்பட்ட தனியார் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் விற்பனை நிலையங்கள், 17 நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (என்சிஎம்எஸ்.,) ஆகியவை உள்ளன.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனையாளர்களுக்கு புதிதாக விற்பனை முனைய கருவி (எப்1.,பிஓஎஸ்.,) வழங்கும் நிகழ்ச்சி ஊட்டியில் நடந்தது. கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தயாளன் தலைமை வகித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து உர விற்பனையாளர்களுக்கும் விற்பனை முனைய கருவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, அவர் பேசுகையில், ‘‘இந்திய அரசு 2018ம் ஆண்டு முதல் உரங்கள் விநியோகத்தை ஒழுங்குபடுத்தவும், தேவைக்கு அதிகமாக உரங்களை பெற்று கள்ளச்சந்தையில் விற்பதை தடுக்கவும் விவசாயிகளுக்கு மட்டுமே உரங்கள் சென்று சேர்வதைக் கண்காணிக்கவுமே இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது’’ என்றார்.
மேலும் உரத்தின் அவசியம் மற்றும் ஒருங்கிணைந்த உர பயன்பாடு குறித்து பேசினார். வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) அமிர்தலிங்கம் முன்னிலை வகித்து, விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே உர விற்பனை மேற்கொள்ள வேண்டும். இருப்பு பதிவேட்டில் உரங்களின் விவரங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
கிரிப்கோ உர நிறுவனத்தின் சார்பில் கள அலுவலர்களால் விற்பனை முனைய கருவிகள் பயன்பாடு, பயன்படுத்தும் முறைகள் குறித்து தெளிவுரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநர் முத்துக்குமார், செயலாளர் கார்த்திகேயன், கிரிப்கோ நிறுவன கள அலுவலர்கள் கதிர்வடிவேல், நாகராஜன் மற்றும் கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.