தற்போதைய விவசாயத்திற்கு உரம் தேவையா? தேவையற்ற மருந்துகளை வாங்க கட்டாயப்படுத்தும் வியாபாரிகள்
* பிரச்னைக்கு வேளாண் துறை தீர்வு காணுமா?
* விவசாயிகள் வேதனை
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு உரம் தேவையா? தேவையற்ற மருந்துகளை வாங்க தனியார் உர வியாபாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். பிரச்னைக்கு வேளாண் துறை தீர்வு காணுமா? என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பருவ மழை பொய்ததுபோன நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சற்று நல்ல மழை பெய்ததால் ஏரி, குளங்கள் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் நிரம்பியது.
தற்போது நடவு செய்யும் பணியில் தொடங்கி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயிர்களுக்கு தேவையான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் அவர்கள் வசிக்கும் நகர் பகுதிக்கு வந்து தனியார் உர விற்பனையாளர்களிடம் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் தங்கள் வயலுக்கு தேவையான யூரியா, பொட்டாஷ், பூச்சி மருந்துகள் வாங்க கடைக்கு செல்கின்றனர். இப்படி செல்லும் விவசாயிகளிடம் வியாபாரிகள் அவர்கள் கேட்டும் உரங்கள், மருந்துகளை மட்டும் கொடுக்காமல் விற்பனையாகாத மருந்துகளையும் சேர்த்து வாங்கினால் தான் நாங்கள் உரம் தருவோம் என்று கொல்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறிப்பாக ஒரு விவசாயி இரண்டு மூட்டை யூரியா வாங்க சென்றால் அவரிடம் சில மருந்துகளை காண்பித்து இதனை வாங்கினால் தான் 2 மூட்டை யூரியா தரப்படும். இல்லை என்றால் யூரியா வழங்க முடியாது என்று ஒரு சிலர் கூறுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் மிகந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு வேளாண்மை துறை தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, நாங்கள் பல ஆண்டுகளாக விவசாயம் நடைபெறாமல் தற்போது தான் விவசாயம் நடைபெறுகிறது என்று கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் உரம் விற்பனையாளர்கள் நாங்கள கேட்கும் உரங்களை தவிர மற்ற உரங்களையும் விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். எங்களுக்கு தேவையான உரங்களை நாங்கள வாங்கி வந்து அதனை பயன்படுத்த முடியாது. வீட்டிலேயே வைக்க வேண்டிய நிலை.
அதனை பயன்படுத்தினால் நன்றாக வளர்ந்த பயிர்கள் கண்டிப்பாக நசாமடையும். இதனால் எங்களுக்கு மேற்கொண்டு செலவுதான் அதிகரிக்கும். சில இடங்களில் நாங்கள் எதிர்த்து கேள்விகேட்டால் விற்பனையாளர்கள் அமைதியாகிவிடுகின்றனர். ஒரு சில விற்பனையாளர்கள் நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
இது வாங்கினால் தான் நீங்கள கேட்கும் உரம் கிடைக்கும் என்று கரராக சொலிவிடுகின்றனர். இதனால் ஒரு சில விவசாயிகள் வேறு வழியின்றி அவர்கள் வாங்க வந்த உரத்தையும் வாங்கிகொண்டு விற்பனையாளர்கள் கட்டாயத்தின்படி விற்பனை செய்யும் மருந்துகளையும் வாங்கிகொண்டு செல்கின்றனர்.இதனால் அவர்களுக்கு தேவையற்ற செலவுதான் ஏற்படும். இதனை மாவட்ட வேளாண்மை துறை கண்காணித்து தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.