மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,500 கனஅடியாக நீடிப்பு: பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்
மேட்டூர்: கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் இரு மாநில எல்லையில் பெய்து வரும் பருவ மழையால் ஒகேனக்கல் காவிரி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலையும் அதே அளவில் நீர்வரத்து நீடித்தது. அங்குள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின்அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் இன்று 2வது நாளாக தடை நீடித்தது.இதபோல் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 30,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 35,500 கன அடியாக அதிகரித்தது.
இன்று காலை அதே அளவில் நீர்வரத்து நீடித்தது. அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,300 கன அடி, உபரி நீ போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 16,700 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இவை தவிர கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல் மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று 3வது நாளாக, முழு கொள்ளளவான 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் திறக்கப்படுவதால், சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையம் மற்றும் 7 கதவணைகளில் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து 35,500 கனஅடி நீர் திறக்கப்படுவதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இடைப்பாடி அருகே பூலாம்பட்டி-நெரிஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணையில் விசைப்படகு போக்குவரத்து இன்று காலை நிறுத்தப்பட்டது. இதனால், சேலம், ஈரோடு ஆகிய இரு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள் 3 கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்கின்றனர்.