ரேஷன் கடை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் பெண் ஊழியர் படுகாயம்: மருத்துவமனையில் அனுமதி
தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை விஜயராகவன் தெரு வள்ளலார் நகர் மேம்பாலத்தின் கீழே ரேஷன் கடை இயங்கி வருகிறது. 60 வருட பழமையான இந்த கடையின் மேற்கூரை சிதலமடைந்து இருந்துள்ளது. இந்த ரேஷன் கடையில் விற்பனையாளராக ஜெயந்தி (50) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று பணியில் இருந்தபோது கடையின் மேற்கூரை சிமென்ட் கலவை பெயர்ந்து ஜெயந்தி தலையில் விழுந்ததில் படுகாயமடைந்தார். உடனடியாக சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஜெயந்தியின் கணவர் குணாளன் கூறும்போது, ”நான் தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எங்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் பிள்ளை உள்ளனர். இவர்களுக்கு திருமணம் செய்துவிட்டோம். ஜெயந்தி பணிபுரியும் ரேஷன் கடை பழமையானது. கடை பழுடைந்து இருந்ததால் நாம்கோ மேலாண்மை இயக்குனரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. ரேஷன் கடையின் பின்புறம் ரயில்வே கேட்டு உள்ளதால் விஷஜந்துகள் கடைக்குள் வந்துவிடுமாம். 200க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுதாரர்கள் பொருள் வாங்கி செல்கின்றனர்.
பொதுமக்கள் வரும் நேரத்தில் சிமென்ட் கலவை பெயர்ந்துவிழுந்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் இதுவரை ரேஷன் கடை அதிகாரிகள் எனது மனைவியை பார்க்கவில்லை” என வருத்தத்துடன் தெரிவித்தார். இச்சம்பவம் வண்ணாரப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.