தாம்பரம் அருகே 12வது மாடியில் இருந்து குதித்து பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் கணவன் கைது
தாம்பரம்: தாம்பரம் அருகே கருத்து வேறுபாடு காரணமாக பெண் மருத்துவர் 12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்தவர்யுதிஸ்வரன் (34). துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதீஸ்வரி (30). கோடம்பாக்கத்தில் தங்கி மீனம்பாக்கத்தில் உள்ள சிஜிஎச் மத்திய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்தாண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது. 3 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து சொந்த ஊருக்கே சென்று வேலை செய்து வந்தனர். பிரிந்து வாழ்ந்தாலும் அவ்வப்போது இருவரும் சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறை என்பதால், சென்னை அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது சகோதரி முத்துலட்சுமியை பார்க்க ஜோதீஸ்வரி சென்றுள்ளார். அன்று மாலை வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு ஜோதீஸ்வரி புறப்பட்டார். ஆனால் கீழ் தளத்திற்கு செல்லாமல் அடுக்குமாடி குடியிருப்பின் 12வது தளத்திற்கு சென்றார். அங்கு செருப்பு மற்றும் கைப்பையை கழற்றி வைத்துவிட்டு 12வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து பீர்க்கன்காரணை போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ஜோதீஸ்வரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது ஜோதீஸ்வரியை தற்கொலைக்கு தூண்டிய யுதிஸ்வரன் என தெரியவந்துள்ளது. அவரை நேற்று போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தாம்பரம் அருகே சோகத்ைத ஏற்படுத்தியுள்ளது.