பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், உதவியாளர் கைது
சேலம்: ஆத்தூரில் வீட்டுமனையை தனி பட்டாவாக மாற்றுவதற்கு ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் துலுக்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் குமரேசன் (56). இவர் புதிதாக வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த வீட்டுமனை கூட்டு பட்டாவாக இருப்பதால், தனி பட்டாவாக பெயர் மாற்ற ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள சர்வேயர் ஜீவிதாவை அணுகினார்.
அப்போது வீட்டுமனை அளவீடு செய்ய, சர்வேயர் ஜீவிதா ₹12 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், இதுகுறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ₹10 ஆயிரம் நோட்டுகளை குமரேசனிடம் வழங்கினர்.
பணத்தை பெற்றுக்கொண்ட குமரேசன், நேற்று மாலை 6.30 மணி அளவில் சர்வேயர் ஜீவிதாவிடம் கொடுக்க தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். அங்கு சர்வேயரின் உதவியாளர் கண்ணதாசன், ஜீவிதாவிடம் குமரேசனை அழைத்துச் சென்றார். பின்னர், ஜீவிதா பணத்தை வாங்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக ஜீவிதாவை பிடித்தனர். மேலும், உதவியாளர் கண்ணதாசனையும் கைது செய்தனர்.