43 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் மாவோயிஸ்ட் போலீசில் சரண்
திருமலை: 43 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பெண் மாவோயிஸ்ட் போலீசில் சரண் அடைந்தார்.
நாட்டில் மாவோயிஸ்ட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் ஒடிசா, சட்டீஸ்கர், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலத்தில் நடத்தப்பட்ட என்கவுன்டரில் பல மாவோயிஸ்ட் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பல மூத்த உறுப்பினர்களும் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து விலகிச் செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 43 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் மற்றும் மத்தியக்குழு உறுப்பினர் பொட்டுலா கல்பனா என்கிற சுஜாதா(62) தெலங்கானா மாநில டிஜிபி ஜிதேந்தர் முன்னிலையில் சரணடைந்தார்.
இதுகுறித்து டி.ஜி.பி.கூறியதாவது: தெலங்கானா மாநிலம் காட்வாலைச்சேர்ந்த சுஜாதா இளம் வயதிலேயே மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். 1984ம் ஆண்டில், அவர் உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவர் மல்லோஜுலா கோட்டேஸ்வர ராவ் என்கிற கிஷன்ஜியை திருமணம் செய்து கொண்டார். 1996 முதல் அந்த இயக்க தளபதியாக பணியாற்றினார். ஜனதன சர்க்கார் பொறுப்பாளராக பணியாற்றிய அவர் மீது 104 வழக்குகள் உள்ளன. சுஜாதா மாவோயிஸ்ட் கட்சி மத்திய குழுவில் உள்ள ஒரே பெண் தலைவராக அங்கீகரிக்கப்பட்டு 43 ஆண்டுகளாக இயக்கத்தில் இருந்துள்ளார். முதலில் மாணவர் சங்கத்தில் பணியாற்றிய பின் அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்துள்ளார்.
சுஜாதாவின் கணவரான கிஷன்ஜி 2011ம் ஆண்டு வங்காளத்தில் நடந்த ஒரு மோதலில் இறந்தார். அதன் பிறகும் சுஜாதா மாவோயிஸ்ட் இயக்கத்தில் தொடர்ந்தார். தற்போது சத்தீஸ்கர் தெற்கு துணை மண்டல பணியக பொறுப்பாளராக செயல்பட்டு வந்தார். அவர் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால் அவரை பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சுஜாதா உடல்நலக்குறைவு காரணமாக போலீசில் சரண் அடைந்தார். அவருக்கு ரூ.25 லட்சம் வெகுமதி வழங்கப்பட்டது. அவரது மறுவாழ்வின் ஒரு பகுதியாக அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். இவ்வாறு டிஜிபி கூறினார்.