விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் கடத்தல்; டிஸ்மிஸ் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் தாய்க்கு சம்மன்: மும்பை போலீஸ் அதிரடி
மும்பை: மும்பையில் கடத்தப்பட்ட லாரி ஓட்டுநர், புனேவில் உள்ள பதவி நீக்கம் செய்யப்பட்ட பெண் அதிகாரி வீட்டில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் அவரது தாயும் சிக்கியுள்ளார். மகாராஷ்டிராவில் போலி சாதி மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழ்கள் சமர்ப்பித்ததாக எழுந்த குற்றச்சாட்டில், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா கெட்கர் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில், தற்போது அவரது தாயார் மனோரமா கெட்கரும் லாரி ஓட்டுநர் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார்.
கடந்த 13ம் தேதி, நவி மும்பை பகுதியில் பிரகலாத் குமார் (22) என்பவர் ஓட்டிச் சென்ற லாரி, கார் ஒன்றின் மீது மோதியுள்ளது. இதைத் தொடர்ந்து, காரில் இருந்த இரண்டு நபர்கள் ஓட்டுநர் பிரகலாத் குமாரை வலுக்கட்டாயமாக தங்கள் காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், காரை பின்தொடர்ந்து சென்றபோது, அது புனேவில் உள்ள பூஜா கெட்கரின் வீட்டில் நிற்பதைக் கண்டுபிடித்தனர். அங்கு கடத்திச் செல்லப்பட்ட ஓட்டுநர் பிரகலாத் குமாரை பத்திரமாக மீட்டனர்.
காவல்துறையினர் மீட்புப் பணிக்காக வீட்டிற்குச் சென்றபோது, பூஜாவின் தாய் மனோரமா கெட்கர் கதவைத் திறக்க மறுத்ததாகவும், போலீசாரிடம் முறைகேடாக நடந்துகொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு மனோரமா கெட்கருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஆண்டு நிலத்தகராறு ஒன்றில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் மனோரமா கெட்கர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.