பட்டுப்போன்ற பாதங்களுக்கு மாஸ்க்!
நம் உடலிலேயே அதிகமாக உழைக்கும் சருமம் நம் கால் சருமம்தான். அதனா லேயே அதீத கவனம் கால்களுக்குக் கொடுப்பது அவசியம். உங்கள் கால்களில் உள்ள வறட்சியையும், கருமையும் நீக்கி, மென்மையான மற்றும் புத்துணர்வு கொண்ட தோலை பெற டூ இட் யுவர்செல்ஃப் (DIY) பாத மாஸ்க் சில இதோ.
எலுமிச்சை மாஸ்க்
தேவையானவை
* பருப்பு மாவு - 2 மேசைக்கரண்டி
* தேன் - 1 மேசைக்கரண்டி
* எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி.
செய்முறை: அனைத்தையும் கலந்து தடிமனான பேஸ்ட் போல் தயாரிக்கவும். கழுவிய கால்களில் மெதுவாக தேய்த்து பூசவும். 20 நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
பயன்கள்: கருமை நீக்கம், நறுமணமும் மென்மையும் பெறலாம்.
மஞ்சள் மாஸ்க்
தேவையானவை
* கஸ்தூரி மஞ்சள் - 1/2 மேசைக்கரண்டி
* தயிர் - 2 மேசைக்கரண்டி
* தேன் - 1 மேசைக்கரண்டி.
செய்முறை: அனைத்துப்பொருட்களை கலந்து பேஸ்ட் தயாரித்து கால்களில் பூசவும். 15-20 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் சூடான நீரில் அலசவும்.
பயன்கள்: தோல் தடிமன், வறட்சி நீங்கி பளபளப்புக் கொடுக்கும்.
க்ரீன் மாஸ்க்
தேவையானவை
* புதினா/துளசி இலை- அரை கப்
* நெல்லிக்காய் பொடி - 1 மேசைக் கரண்டி
* இயற்கையான எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
செய்முறை: இலைகளை அரைத்து அதனுடன் நெல்லிக்காய் பொடி, எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். கால்களுக்கு மசாஜ் செய்வது போல் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
பயன்கள்: அலர்ஜி உண்டாக்கும் கிருமிகள் நீக்கி, கால்களுக்கு ஈரப்பதம் கொடுக்கும்.
குறிப்பு: வாரத்திற்கு இரண்டு முறை இந்த இயற்கை மாஸ்க்குகளைப் பயன்படுத்தலாம். தினந்தோறும் மாய்ச்சுரைசர்கள் அல்லது லோஷன்கள் பயன்பாடும் அவசியம். எதுவும் இல்லையேல் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கத்தையாவது கடைபிடித்தால் வறட்சியால் உண்டாகும் சுருக்கங்கள், பாதவெடிப்பு, அலர்ஜிகள் இவற்றிலிருந்து பாதங்களைப் பாதுகாக்கலாம்.
- எஸ்.விஜயலட்சுமி