தமிழ் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்: கிங்டம் படத் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை
பெங்களூரு: தமிழ் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம் என கிங்டம் படத் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான திரைப்படம் கிங்டம். இத்திரைப்படம் கடந்த 31ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியானது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் இலங்கை தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்து காட்சிகள் உள்ளதாலும் தமிழ் கடவுளான முருகன் பெயரை வில்லனுக்கு சூட்டி இருப்பதாலும் கிங்டம் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இல்லையெனில் திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர்கள் முன்பு முற்றுகை செய்து வருகின்றனர். இந்நிலைலையில் தமிழ் மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம் என கிங்டம் படத் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்; சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் 'கிங்டம்':
இப்படத்தின் சில காட்சி அமைப்புகள் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக கேள்விப் பட்டோம். தமிழ் மக்களின் உணர்வுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். இந்தக் கதை முற்றிலும் கற்பனையானது என படத்தின் மறுப்புப் பகுதியில் (disclaimer portion) குறிப்பிட்டுள்ளோம் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம். இதையும் மீறி மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். கிங்டம் திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்'' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.