கட்டண கொள்ளை
பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே பலருக்கும் பயணங்கள் கசப்பாகிவிடும். அதிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் வேலையின் நிமித்தம் குடியிருப்போர், தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப படும் பாடு சொல்லி மாளாது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பெருநகரங்களில் வசிப்போர், தங்கள் சொந்த ஊருக்கு செல்லவும், பண்டிகை முடிந்த பின்னர் மீண்டும் நகரத்திற்கு திரும்பவும் பயணம் அடிப்படையில் பெரும் போராட்டமே நடத்த வேண்டியதுள்ளது.
இரு மாதங்களுக்கு முன்பே தயார் நிலையில் இருந்தாலும், ரயில்களை பொறுத்தவரை தீபாவளி பண்டிகைக்கு டிக்கெட் முன்பதிவு 5 நிமிடங்களில் முடிந்து விடுகிறது. ரயில் போக்குவரத்தில் இத்தனை சவால்கள் இருக்கும்போது, பொதுமக்கள் சாலை போக்குவரத்தை நாடுகின்றனர். அங்கும் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் இருக்கைகள் வழக்கம்போல் நிரம்பி வழிகின்றன. எப்படியும் ஊர் போய் சேர வேண்டும் என போராடும் பயணிகளுக்கு கடைசி அஸ்திரமாக ஆம்னி பஸ்களே காட்சியளிக்கின்றன.
பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, இருக்கைகளுக்கு கடைசி நேரத்தில் ஆம்னி பஸ்கள் வைப்பதுதான் கட்டணம் என்கிற சூழல் நிலவுகிறது. சென்னையில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி செல்ல ரூ.3 ஆயிரத்திற்கு மேல் கட்டணம் வசூலிக்கும் கொடுமைகளும் சில சமயங்களில் ஆம்னி பஸ்களில் அரங்கேறுகின்றன. தீபாவளிக்கு ஊருக்கு சிரமமின்றி செல்லவும், மீண்டும் நகரங்களுக்கு திரும்பவும் கூடுதல் கட்டணத்தை செலுத்த முடியாமல் சாதாரண, நடுத்தர மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றன.
இருப்பினும் பலர் சௌகர்யமான பயணம் என்பதன் அடிப்படையில், ஆம்னி பஸ்கள் விதிக்கும் கூடுதல் கட்டணத்தை கொடுத்துவிட்டு, அதில் பயணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இப்போதே பண்டிகை கால கட்டணமாக ஆம்னி பஸ்கள் கட்டணத்தை ஆயிரக்கணக்கில் உயர்த்தி வருகின்றன. இதனால் பெரும்பாலான பயணிகள் ஆம்னி பஸ்களில் பயணிக்கவே அச்சப்படுகின்றனர்.
இந்நிலையில் ஆம்னி பஸ்களில் கட்டண விகிதங்களை கண்காணிக்க அரசு சிறப்பு குழுக்களை அமைத்திருப்பது பொதுமக்களுக்கு ஆறுதலை தருகிறது. கடந்தாண்டு அரசு சார்பில் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கட்டண விகிதம் அறிவிக்கப்பட்டது. அரசு நிர்ணயித்த கட்டண விகிதத்தில் பயணிகளும் நிம்மதியாக பயணித்தனர். இந்நிலையில் இவ்வாண்டும் ஆம்னி பஸ்கள் கட்டணத்தை குறைத்திட போக்குவரத்து துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார். மேலும் கட்டண வசூலை கண்காணிக்க சிறப்பு குழுக்களும் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆம்னி பஸ்களின் கட்டண விகிதத்தை கண்காணிக்க உள்ளன.
இதுதவிர ஆம்னி பஸ் உரிமையாளர்களை அழைத்து விரைவில் போக்குவரத்து துறை ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் பேச உள்ளனர். அதில் அரசு நிர்ணயிக்கும் கட்டண விகிதத்தை மீறி, கூடுதல் கட்டணம் வசூலித்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட உள்ளது. பொதுமக்களும் கூட ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு குறித்து புகார்களை போக்குவரத்து துறைக்கு அனுப்பிட கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. பண்டிகை கால பயணங்களை இனிமையாக்கிட அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.