பிப்ரவரியில் டெல்லியில் ஒரு குத்து, நவம்பரில் பீகாரில் ஒரு குத்து: 9 மாதங்களில் 2 மாநிலங்களில் ஓட்டு போட்ட பா.ஜ எம்பி; காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆவேசம்
பா.ஜவின் மாநிலங்களவை எம்பியும், ஆர்எஸ்எஸ் சிந்தாந்தவாதியுமான ராகேஷ் சின்ஹா கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் துவாரகாவில் வாக்களித்தார். நேற்று பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சிவான் தொகுதியிலும் ராகேஷ் சின்ஹா எம்பி வாக்களித்தார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் இது மிகப்பெரிய வாக்கு மோசடி என்று குற்றம் சாட்டின. இதுதொடர்பாக ஆம்ஆத்மியின் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் தங்கள் டிவிட் பதிவில்,’ ராகேஷ் சின்ஹா எம்பி டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள மோதிலால் நேரு கல்லூரியில் பாடம் நடத்துகிறார்.
அவரால் தனது பீகார் முகவரியைக் கூட காட்ட முடியாது. பாஜ அரசாங்கத்தின் திருட்டை நாம் கண்டறிந்தால், அவர்கள் தங்கள் வழிகளைச் சரிசெய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை, அவர்கள் வெளிப்படையான மற்றும் அப்பட்டமான திருட்டில் ஈடுபடுவார்கள்’ என்று குறிப்பிட்டு டெல்லி, பீகாரில் ராகேஷ் சின்ஹா எம்பி வாக்களித்த படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதை ரீடிவிட் செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஷ்ரினேட்,’பாஜ எம்பி ராகேஷ் சின்ஹா 2025 பிப்ரவரியில் நடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்தார். 2025 நவம்பர் 6ல் பீகார் சட்டப்பேரவை தேர்தலிலும் வாக்களித்தார். இது எந்தத் திட்டத்தின் கீழ் நடக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த ராகேஷ் சின்ஹா எம்பி கூறுகையில், ‘‘அரசியல் இவ்வளவு ஆழமற்றதாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது.
அரசியலமைப்பின் மீதான நம்பிக்கையை கேள்வி கேட்பவர்கள் நூறு முறை யோசிக்க வேண்டும். கடந்த பிப்ரவரியில் எனது பெயர் டெல்லி வாக்காளர் பட்டியலில் இருந்தது. பீகார் அரசியலில் நான் தீவிரமாக ஈடுபட்டதால், எனது பெயரை பீகார் மாநிலம் மன்சர் பூர் (பெகுசராய்) கிராமத்திற்கு மாற்றினேன். இந்தக் குற்றச்சாட்டுக்காக நான் அவதூறு வழக்குத் தொடர வேண்டுமா? எனது மூதாதையர் வீடு பெகுசராய். நான் அந்த மண்ணிலிருந்து பிடுங்கப்பட்ட மனிதன் அல்ல. நான் எனது கிராமத்திற்கு வந்து வாக்களிக்க சென்றேன். அரசியலமைப்பின் மதிப்புகளைப் பற்றி யார் பேசுகிறார்கள்? ஆம் ஆத்மி கட்சி ஜனநாயகத்தின் மீது ஒரு கறை’ என்று குறிப்பிட்ட அவர் பெகுசராய் தொகுதி மான்சர் பூர் கிராமத்தில் தனது முகவரி பட்டியலிடப்பட்டுள்ள தனது புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த விளக்கத்திற்கு சவுரப் பரத்வாஜ் பதிலடி கொடுத்து, ‘டெல்லி மோதிலால் நேரு கல்லூரியில் இன்னும் ஆசிரியராக இருக்கும் போது தனது முகவரியை எவ்வாறு மாற்ற முடியும்? அரசியல் செயல்பாட்டிற்காக வாக்குகளை மாற்றுவது எங்கே கட்டாயம்? அவதூறு வழக்குகளால் மக்களை பயமுறுத்தி பாஜ எவ்வளவு காலம் மவுனமாக்கும்? உங்கள் அரசாங்கம் பல வழக்குகளைத் தொடுத்துள்ளது. அதே போல் இன்னொரு வழக்கு என்றாலும் பரவாயில்லை. டெல்லி தேர்தலில் பிப்ரவரியில் வாக்களித்து விட்டு பீகார் தேர்தலுக்காக ஏப்.28 அன்று புதிய வாக்காளர் அட்டையை அவர் பெற்றுள்ளார். சட்டத்தின்படி, ஒரு நபரின் வாக்கு அவர்கள் பணிபுரியும் மற்றும் வசிக்கும் இடத்தில்தான் இருக்க வேண்டும். அவர்களின் மூதாதையர் கிராமத்திலிருந்து அல்ல’ என்று பரத்வாஜ் கூறினார்.