அச்சமற்ற முடிவு எடுக்கும் உத்வேகத்தை பாட்டியிடம் இருந்து பெற்றேன்: ராகுல் காந்தி உருக்கம்
புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திராகாந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இது குறித்து கட்சியின் தலைவர் கார்கே தனது எக்ஸ் தள பதிவில்,‘‘அவரது அசைக்க முடியாத உறுதியும், பொது சேவைக்கான வாழ்நாள் முழுவதுமான அர்ப்பணிப்பும் இந்தியாவின் முன்னேற்றப் பாதையில் அழியாத அடையாளத்தை விட்டுச்சென்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், பேரனுமான ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில்,‘‘இந்தியாவிற்காக அச்சமற்ற முடிவுகளை எடுக்கவும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேசிய நலன்களை முதன்மைப்படுத்தவும், எனது பாட்டியிடம் இருந்து தான் எனக்கு உத்வேகம் கிடைத்தது. அவரது துணிச்சல், தேசபக்தி மற்றும் ஒழுக்கம் ஆகியவை அநீதிக்கு எதிராக உறுதியாக நிற்பதற்கு என்னை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன’’ என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் தள பதிவிலும் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பங்களிப்புக்கள் நினைவுகூரப்பட்டுள்ளது.