பழுதான விமானம் தரையிறங்கும்போது மற்றொரு விமானம் குறுக்கிட்டது பற்றி விசாரிக்க வேண்டும்: கே.சி.வேணுகோபால் எம்பி வலியுறுத்தல்
மீனம்பாக்கம்: திருவனந்தபுரத்தில் இருந்து நேற்றிரவு டெல்லிக்கு சென்ற ஏர்இந்தியா விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. அந்த விமானம் ஓடுபாதையில் இறங்கும்போது, மற்றொரு விமானம் முன்னதாக குறுக்கிட்டு ஓடியது எப்படி என்று காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு நேற்றிரவு 10 மணியளவில் 5 எம்பிக்கள் உள்பட 150 பயணிகளுடன் ஏர்இந்தியா விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதையடுத்து நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் சென்னை விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் அந்த விமானத்தில் இருந்த 5 எம்பிக்கள் உள்பட 150 பயணிகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
அந்த விமானம் தரையிறங்க வந்தபோது, அதே பாதையில் மற்றொரு விமானம் குறுக்கிட்டு ஓடியது. இதில் அதிர்ச்சியான விமானி, தனது விமானத்தை சற்றும் தாமதிக்காமல் மீண்டும் உயரே பறக்க செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பறந்துவிட்டு, சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவசரமாக தரையிறங்க வேண்டிய விமானத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியாகி, கண்ணீர் விட்டு அழுததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விமானத்தில் இருந்த கேரள காங்கிரசின் நாடாளுமன்ற எம்பி கே.சி.வேணுகோபால், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு கிளம்பிய ஏர்இந்தியா விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இதனால் அந்த விமானம் சென்னை விமானநிலையத்தில் முதன்முறையாக தரையிறங்க வந்தபோது, அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் குறுக்கிட்டு ஓடியது. இதில் அதிர்ச்சியான எங்கள் விமானி, உடனடியாக தனது விமானத்தை மீண்டும் உயரே பறக்க செய்து, 2வது முறையாக சென்னை விமானநிலையத்தில் மீண்டும் அவசரமாக தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கிவிட்டு, அதே நேரத்தில் மற்றொரு விமானம் அதே ஓடுபாதையில் இறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது எப்படி, இதனால் அந்த விமானம் மீண்டும் 2வது முறையாக தரையிறங்கியது உள்பட அனைத்து விவகாரங்களையும் டெல்லியில் உள்ள டைரக்டர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேசன், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் முழு விசாரணை நடத்தி, இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.சி.வேணுகோபால் எம்பி குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு ஏர்இந்தியா நிறுவனம் மறுப்பு தெரிவித்து, தங்களின் வலைதளப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில், சென்னையில் இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தாலும், அதை சமாளிப்பதற்கு திறமையான, அனுபவமிக்க விமானிகள் எங்களின் விமானங்களை இயக்கி கொண்டிருக்கின்றனர் என்று தகவல் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, பழுதான விமானத்தில் இருந்த கேரள எம்பிக்கள் 5 பேர் உள்பட 150 பயணிகளும் மாற்று விமானம் மூலமாக இன்று அதிகாலை 1 மணியளவில் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.