அரிதான ஒன்று கொழுப்பு கட்டி வடிவில் புற்றுநோய் ஆபத்து: கட்டி வளர்ந்தால் பரிசோதனை தேவை, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், மருத்துவர்கள் அறிவுறுத்தல்
சென்னை: சர்கோமா புற்றுநோய் மனித உடலின் இணைப்பு திசுக்களில் தோன்றும் ஒரு அரிய, ஆனால் சிக்கலான புற்றுநோயாகும். இது எலும்புகள், தசைகள், கொழுப்பு திசுக்கள், குருத்தெலும்பு, நரம்புகள், ரத்த நாளங்கள் மற்றும் பிற மென்மையான திசுக்களை பாதிக்கக்கூடியது. புற்றுநோய்களில் பெரும்பாலானவை உறுப்புகளின் உயிரணுக்களில் (எ.கா., நுரையீரல், மார்பகம்) உருவாகின்றன, அதேபோல சர்கோமா உடலின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கும் மெசன்கைமல் (mesenchymal) செல்களில் தொடங்குகிறது.
உலகளவில் புற்றுநோய்களில் சுமார் 1 சதவீதம் மட்டுமே சர்கோமாவாக இருந்தாலும், இதன் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும். இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை இது பாதிக்கும், குறிப்பாக மற்ற பல புற்றுநோய்களை போலல்லாமல், சர்கோமா எந்த வயதிலும் வரக்கூடும். எனினும் 70 சதவீத அதிகமான சர்கோமா பாதிப்புகள் 20 வயதுக்குட்பட்டவர்களிடையே ஏற்படுகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது. தலை முதல் கால் வரை எங்கு வேண்டுமானாலும் இவை உருவாகலாம்.
கால், கணுக்கால், பாத மூட்டுகள், தோள், கை, மணிக்கட்டுகள், மார்பு சுவர், வயிறு, இடுப்பு போன்ற தண்டு வடப்பகுதிகள் மற்றும் தலை, கழுத்து பகுதியில் இவை உண்டாக அதிக வாய்ப்புள்ளது. சர்கோமாவின் அரிதான தன்மை, அதன் பல்வேறு வகைகள் மற்றும் அதன் ஆரம்ப அறிகுறிகளின் தெளிவின்மை ஆகியவை இதனை ஒரு மருத்துவ சவாலாக மாற்றுகின்றன. இந்தியாவில், விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், பலர் இந்நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவதில்லை, இதனால் சிகிச்சை தாமதமாகிறது.
சர்கோமா புற்றுநோய் பல வகைகள் இருந்தாலும் மென்மையான திசு சர்கோமா (Soft Tissue Sarcoma), எலும்பு சர்கோமா (Bone Sarcoma) ஆகிய சர்கோமா வகை புற்றுநோய் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மென்மையான திசு சர்கோமா புற்றுநோய் தசைகள், கொழுப்பு, நரம்புகள் போன்றவற்றை பாதிக்கிறது. அதேபோல எலும்பு சர்கோமா புற்றுநோய் எலும்புகளில் உருவாகிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 1,00,000 பேருக்கு 2-5 பேர் மென்மையான திசு சர்கோமாவால் பாதிக்கப்படுகின்றனர்.
எலும்பு சர்கோமா இன்னும் அரிதானது, ஆண்டுக்கு 1,00,000 பேருக்கு 0.2-0.5 பேர் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில், சர்கோமா பற்றிய துல்லியமான புள்ளிவிவரங்கள் பெரிய அளவு இல்லை என்றாலும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடையே இது குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது. மென்மையான திசு சர்கோமா பெரும்பாலும் 20-50 வயதுடையவர்களை பாதிக்கிறது. எலும்பு சர்கோமா, குறிப்பாக ஆஸ்டியோசர்கோமா, 10-20 வயதுடைய இளைஞர்களிடையே அதிகம் காணப்படுகிறது.
ஆண்களும் பெண்களும் சம அளவில் பாதிக்கப்படலாம், ஆனால் சில வகைகள் சர்கோமா புற்றுநோய் ஆண்களிடையே சற்று அதிகமாக உள்ளது. இந்தியாவில், சர்கோமா குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது, இதனால் பலர் தாமதமாகவே நோயறிதல் பெறுகின்றனர். சர்கோமாவுக்கு ஒரு குறிப்பிட்ட காரணம் எதுவும் கண்டறியப்படாமல், பொதுவான காரணங்களாக சொல்லப்படுகிறது. தடுப்பு நடவடிக்கைகள் சவாலானதாக இருப்பதால் உடலில் கட்டி ஏற்பட்டு பெரிதாக வளர தொடங்கினால் பெற்றோர்கள் அறிகுறிகளை உணர்ந்து விரைவில் மருத்துவரை அணுக வேண்டும்.
கொழுப்பு கட்டியும், சர்கோமா புற்றுநோய் கட்டியும் வெவ்வேறு என புற்றுநோய் நிபுணர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கொழுப்பு கட்டிக்கும் (லிபோமா) சர்கோமா புற்றுநோய் கட்டிக்கும் இடையே வேறுபாடு உள்ளது. கொழுப்பு கட்டி என்பது கொழுப்பு திசுக்களில் உருவாகும் புற்றுநோய் அல்லாத கட்டியாகும், அதே சமயம் சர்கோமா என்பது கொழுப்பு, தசை, எலும்பு போன்ற இணைப்பு திசுக்களில் உருவாகும் ஒரு அரிய வகை புற்றுநோய் ஆகும்.
லிபோமா பொதுவாக ஆபத்தற்றது மற்றும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படலாம், ஆனால் சர்கோமா ஆபத்தானதாகவும், பரவக்கூடியதாகவும் இருக்கும். ஆரம்ப கட்டங்களில், இது வலியற்ற கட்டியாகவோ அல்லது வீக்கமாகவோ தோன்றும், இதை பலர் புறக்கணிக்கிறார்கள். காலப்போக்கில், கட்டி படிப்படியாக வளர்கிறது. நரம்புகள் அல்லது உறுப்புகளை அழுத்துவதால் வலி பொதுவாக தாமதமான அறிகுறியாகும்.
எனவே கட்டி உருவாகி வளர தொடங்கியது முதல் மருத்துவர்களை அணுக வேண்டும். வழக்கமாக நோயின் அளவை மதிப்பிடுவதற்கு இமேஜிங் ஆய்வுகளை (MRI/CT ஸ்கேன்) மேற்கொள்ள அறிவுறுத்துவார்கள், மேலும் நோயறிதலை உறுதிப்படுத்த ஒரு பயாப்ஸி பரிசோதனை செய்யப்படும். சிகிச்சையானது கட்டியின் அளவு, இடம் மற்றும் கட்டத்தைப் பொறுத்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* சர்கோமா புற்றுநோய் அறிகுறி
* உடலில் ஒரு வலியற்ற கட்டி அல்லது வீக்கம்
* கட்டி பெரிதாகி அருகிலுள்ள நரம்புகள் அல்லது தசைகளை அழுத்தும்போது வலி ஏற்படலாம்
* கைகள் அல்லது கால்களில் கட்டி இருந்தால், அந்தப் பகுதியை நகர்த்துவதில் சிரமம் ஏற்படலாம்
* எதிர்பாராத எடை இழப்பு
* சோர்வு அல்லது பலவீனம்
* எலும்பு வலி, எலும்புக்கு அருகில் வீக்கம் அல்லது கட்டி தோன்றுதல்.