2 மகள்களை கொன்று தந்தை தற்கொலை: வைகை அணையில் உடல்கள் மீட்பு
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (37) - பிரியங்கா (30) தம்பதிக்கு தாராஸ்ரீ (7), தமிழிசை (5) என 2 மகள்கள் உள்ளனர். தம்பதி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணமூர்த்தி மன அழுத்த பிரச்னைக்கு சிகிச்சை எடுத்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது குழந்தைகளுடன் கிருஷ்ணமூர்த்தி வெளியே சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை வைகை அணைப் பகுதியில் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த வைகை அணை போலீசார் சிறுமிகளின் உடல்களை மீட்டு விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில், கிருஷ்ணமூர்த்தி மற்றும் 2 மகள்களை காணவில்லை என பெரியகுளம் வடகரை போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி பிரியங்கா புகார் அளித்திருப்பது தெரியவந்தது.
கிருஷ்ணமூர்த்தி தனது குழந்தைகளுடன் வைகை அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அணைப்பகுதியில் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் தேடிய போது, கிருஷ்ணமூர்த்தியின் உடலும் மீட்கப்பட்டது. குடும்பப் பிரச்னையில் குழந்தைகளை வைகை அணையில் வீசி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.