சாதி மறுப்பு திருமணத்தால் நேர்ந்த கொடூரம்; மகளின் கண்முன்னே மருமகனை சுட்டுக்கொன்ற குரூர தந்தை: பீகார் மருத்துவமனை வளாகத்தில் பயங்கரம்
பாட்னா: பீகாரில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட செவிலியர் மாணவர், அவரது மாமனாரால் மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் தர்பங்கா மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி செவிலியர் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் ராகுல் குமார் (25). அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த தனு பிரியா (24) என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் வீட்டில் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்புகளை மீறி இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர், கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரே தங்கும் விடுதியில் வெவ்வேறு தளங்களில் வசித்து வந்தனர். முன்னதாக, தனது தந்தை மற்றும் சகோதரர்களால் தனக்கோ அல்லது தனது கணவரின் உயிருக்கோ ஆபத்து நேரிடலாம் என்று கூறி, தனு பிரியா பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்நிலையில், நேற்று மாலை ராகுலும் அவரது மனைவி தனு பிரியாவும் விடுதிக்கு வெளியே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, தலையை மூடிய நிலையில் மேலாடை அணிந்த நபர் ஒருவர் ராகுலை நோக்கி வந்துள்ளார். மிக அருகில் வந்த பிறகே, அவர் தனது தந்தை பிரேம்சங்கர் என்பதை தனு பிரியா அடையாளம் கண்டுள்ளார்.
ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் பிரேம்சங்கர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ராகுலின் மார்பை நோக்கி சரமாரியாக சுட்டார். குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த ராகுல், மனைவி தனு பிரியாவின் மடியிலேயே உயிரிழந்தார். தனது கணவரை தந்தை துப்பாக்கியால் சுட்டதில், இந்த கொலை சம்பவத்தில் தனது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பங்கு இருப்பதாக கூறி தனு பிரியா கதறி அழுதார். ராகுல் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்த அவரது நண்பர்களும், சக மாணவர்களும் ஆத்திரமடைந்து பிரேம்சங்கரை சரமாரியாகத் தாக்கினர். படுகாயமடைந்த அவர், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது.
மேலும் ராகுலுக்கு நீதி கேட்டு மாணவர்கள் முழக்கமிட்டதால், அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறினர். போலீசார் லேசான தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். மேலும் மருத்துவமனை வளாகத்தில் மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்திய வீடியோக்கள் வெளியாகின. இந்த தாக்குதல் காரணமாக பிரேம்சங்கரின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கவுசல் குமார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். அப்பகுதியில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், ‘செவிலியர் மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவே முதலில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், காதல் கலப்பு திருமணம் காரணமாக பெண்ணின் தந்தையே அவரை சுட்டது தெரியவந்தது. குற்றவாளிக்கு மாணவர்கள் சிகிச்சை அளிக்க விடாமல் தடுத்ததால் மருத்துவமனையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர் தற்போது பாட்னாவிற்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.
கலப்பு திருமணம் செய்து கொண்ட மாணவி தனுபிரியா, ஏற்கனவே தனது தந்தை மற்றும் சகோதரர்களால் தனக்கோ அல்லது தனது கணவரின் உயிருக்கோ ஆபத்து நேரிடலாம் என்று கூறி நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அப்படி இருக்கையில் ராகுல் குமார் சுட்டுக் கொல்லப்பட்டார்.