குடும்பம் நடத்த மனைவியை அனுப்பாத மாமனார் கத்தியால் குத்திக்கொலை: மருமகன் வெறிச்செயல்
சேலம்: குடும்பம் நடத்த அனுப்பாத மனைவியை அனுப்பாத மாமனாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (54), கூலித்தொழிலாளி. இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மகேஸ்வரியை (32), மேச்சேரி அருகேயுள்ள தொன்னையன்காட்டுவளவை சேர்ந்த சேட்டு மகன் மயில்சாமி (34) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். மயில்சாமி-மகேஸ்வரி தம்பதியினருக்கு 13, 11, 9 வயதுகளில் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மயில்சாமி, ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார். பகலில் வெளியூரில் சுற்றித்திரியும் அவர், மாலையில் வீடு திரும்பியதும் தனக்கு ஆண் குழந்தை இல்லையே என அடிக்கடி மனைவி மகேஸ்வரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த மாதம் விநாயகர்சதுர்த்தி நாளன்று மயில்சாமி தகராறில் ஈடுபட்டநிலையில், அவரிடம் கோபித்துக்கொண்டு தனது 3 மகள்களுடன் மகேஸ்வரி, கொத்தப்புளியானூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று இரவு, கொத்தப்புளியானூருக்கு குடி போதையில் மயில்சாமி வந்துள்ளார். அவர், தனது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியிடம் குடும்பம் நடத்த வருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த மாமனார் பழனிசாமி, தட்டிக்கேட்டுள்ளார். அப்போது திடீரென தனது இடுப்பில் வைத்திருந்த ஆடு அறுக்கும் கத்தியால், மாமனார் பழனிசாமியை மயில்சாமி சரமாரியாக குத்தினார். உடலில் பல்வேறு இடங்களில் குத்து விழுந்தநிலையில், ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வரவும், அங்கிருந்து மயில்சாமி தப்பியோடினார்.
ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து கிடந்த பழனிசாமியை உறவினர்கள் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே பழனிசாமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவாக இருந்த மயில்சாமியை நேற்று இரவு கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தன்னிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி மகேஸ்வரியை மாமனார் பழனிசாமி தன்னுடன் அனுப்பி வைக்க மறுத்துவிட்டார். நானும் பலமுறை அழைத்தும் குடும்பம் நடத்த வராததால் ஆத்திரத்தில் சென்று தகராறு செய்தேன். அப்போதும், தன்னும் மனைவி, குழந்தைகளை அனுப்பி வைக்க மறுத்ததால் மாமனார் பழனிசாமியை கத்தியால் குத்திக் கொன்றேன் என கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.