உத்தர பிரதேசத்தில் கவுரவக் கொலை; 17 வயது மகளை சுட்டுக்கொன்ற தந்தை, சகோதரன்: காதலித்ததால் நேர்ந்த கொடூரம்
ஷாம்லி: உத்தரபிரதேசத்தில் காதலித்த மகளை, தந்தையும் 15 வயது சகோதரனும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கவுரவக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டம், கந்தலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பேக்தா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜுல்ஃபாமின் மகள் முஸ்கான் (17), பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். முஸ்கான், அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதலுக்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். தங்களது மகளின் காதல், குடும்பத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் கருதியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முஸ்கான் தனது காதலனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததை அவரது தந்தை ஜுல்ஃபாமும், 15 வயது சகோதரனும் பார்த்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், முஸ்கானை வீட்டின் மேல் தளத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் முஸ்கானை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தந்தை ஜுல்ஃபாமையும், அவரது 15 வயது மகனையும் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
விசாரணையின்போது, தந்தை ஜுல்ஃபாம், மகளைக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக, தந்தை மற்றும் மகன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முஸ்கானின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.