திடீர் பாஸ்ட்புட், திடீர் சாம்பார் மாதிரி திடீர் முதல்வராக நினைக்கிறார் விஜய்: செல்லூர் ராஜூ கொதிப்பு
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி: தமிழ்நாட்டு அரசியலில் எத்தனை பேர் தான் எம்ஜிஆர், எம்ஜிஆர் என சொல்வது என தெரியவில்லை. அரசியல் களத்திற்கு வரக்கூடிய புது முகங்கள் எல்லாமே எம்ஜிஆர் வாரிசுகள் என சொல்லிக் கொள்கிறார்கள். திடீர் சாம்பார், திடீர் பாஸ்ட்புட் மாதிரி, திடீரென விஜய் நேரடியாக முதல்வராக நினைக்கிறார். அரசியலில் அவர் நிறைய பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
எம்ஜிஆருடன் விஜய் தன்னை ஒப்பிட்டு பேசுவது தவறு. அறிஞர் அண்ணாவிடம் அரசியல் பாடம் கற்றுக் கொண்டவர் எம்ஜிஆர். அவரைப் போல உழைத்து படிப்படியாக அரசியலில் முன்னேறி வந்தார். ஆனால், விஜய் அரசியலில் நேரடியாக வந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என நினைக்கிறார். அவருக்கு மக்களின் ஆதரவு எந்த அளவிற்கு உள்ளது என்பது போகப் போகத்தான் தெரியும். மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பு என எம்ஜிஆர் சொல்லுவார். அதையேத்தான் நாங்களும் சொல்கிறோம். இவ்வாறு கூறினார்.