விளைச்சலை கபளீகரம் செய்யும் வெண்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!
உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, கரும்பு, பாக்கு உள்பட 50க்கும் மேற்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களின் வேர்களைத் தாக்கி விளைச்சலைக் குறைக்கச் செய்யும் ஒரு வகையான புழுதான் வெண்புழு. பயிர்களின் வகை, மண் அமைப்பு, பருவநிலை, கார அமிலத்தன்மை மற்றும் நில உயரத்திற்கு ஏற்ப பல்வேறு பயிர்களில் இவை காணப்படும். குறிப்பாக, கரும்பு, நிலக்கடலை, மிளகாய், தினை, உருளைக்கிழங்கு, சோளம், கோதுமை, பார்லி, கம்பு, எள், சூரியகாந்தி, பருத்தி, புகையிலை, சோயாபீன், கத்தரி, வெள்ளரி, வெண்டை மற்றும் பாக்கு போன்ற பயிர்களை தாக்கி சேதத்தை ஏற்படுத்தும். பொதுவாக வேர்ப்புழு மண்ணுக்கு கீழ் உள்ள வேர்ப்பகுதியை ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகம் தாக்கும். இருப்பினும், காலநிலைக்கு ஏற்ப சேதநிலை மாறுபடும்.
இப்புழு வேர்களை தாக்குவதால், செடிகள் வாடி மடிந்துவிடும். இத்தாக்குதலின் மூலம் 12 முதல் 80 சதவீதம் வரை விளைச்சல் இழப்பு ஏற்படும். ஒரு செடியில் ஒன்று முதல் ஐந்து புழுக்கள் வரை தென்படும். புழுக்களின் வாழ்நாள் 70 முதல் 220 நாட்கள் வரை வேறுபடலாம். புழுக்கள் 3 நிலைகளை கடந்து கூட்டுப்புழுவாக மாறும். முதல்நிலை புழு மக்கிய கரிம வளத்தையும், 2ம் மற்றும் 3ம் நிலைப்புழு வேர்களை உண்ணும். கூட்டுப்புழுவின் வாழ்நாள் 14 ஆகும். வண்டுகள் கோடை மழைக்கு பின்பு வெளிவரும். அதிக வண்டுகள் மே மற்றும் ஜூன் மாதத்தில் வெளிவரும். இதனால், இந்த வண்டிற்கு மே-ஜூன் வண்டுகள் என்ற பெயரும் உண்டு. இவை, வேம்பு, இலந்தை, மா, அத்தி, முருங்கை, தீக்குச்சி, புளி, கருவேல் போன்ற மரங்களின் இலைகளை உண்ணும். இத்தகைய வேர்ப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது விவசாயிகளுக்கு பெரிய சவாலாக உள்ளது. இவை, மண்ணுக்குள் இருந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. செடிகள் வாடும் வரை வேர்களின் சேதங்கள் வெளியில் தெரிவதில்லை. மேலும், இந்த வெண்புழுக்கள் பூச்சி மருந்துகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டிருக்கின்றன. இதனால் இவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இருப்பினும், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளின் மூலம் வேர்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும்.
நிலத்தில் நாம் உழவு செய்யும்போது ஆழ உழவு செய்வது மிக மிக அவசியம். ஆழ உழவு செய்வதினால், புழுக்கள் மண்ணில் இருந்து வெளிக்கொணரப்பட்டு வெயிலினால் அழிக்கப்படும். மேலும், மண்ணின் மேல் பகுதியில் உள்ள இப்புழுக்களை பறவைகள் கொத்தி தின்பதன் மூலமும் அழிக்கப்படுகிறது. பயிர்களை 7 முதல் 14 நாட்களுக்கு நீரில் மூழ்க வைத்து அழிக்கலாம். இரவில் விளக்குப் பொறியின் மூலம் (எக்டருக்கு ஒன்று) வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம். மீத்தாக்சி பென்சோயேட் என்னும் ரசாயன இனக்கவர்ச்சிப் பொருள் மூலம் 15 மீ தொலைவில் உள்ள வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். தீப்பந்தம் அல்லது தீ மூட்டம் மூலம் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். மேலும், புரோமாகஸ் இசோனினிக்கஸ் மற்றும் மாலோபோரா ரூபிக்காடா (அசிலிடே டிப்டீரா) என்ற இரை விழுங்கிகள் வேர்ப்புழுக்களை உண்ணும். டிப்டீரன் புழு ஒட்டுண்ணிகளான மைக்ரோத்தால்மா டிஸ்ஜங்கடா, மை.புரூய்நோசா மற்றும் பில்லோடீக்சாடிபியாலிஸ் ஆகியவை புழுக்களைத் தாக்கி அழிக்கும். நன்கு மக்கிய தொழு உரத்தை இட்டும், பயிர் சுழற்சி செய்தும் புழுக்களை அழிக்கலாம். கூட்டுப்புழுக்கள் ஆழமான மண்ணில் இருப்பதால் ஆழ உழவை அவசியம் செய்ய வேண்டும்.
வேர்ப்புழுக்களை பெசில்லஸ் மற்றும் செரேஷியா பாக்டீரியாக்கள் தாக்கி அழிக்கும். பெவேரியா பேசியானா மற்றும் மெட்டாரைசியம் அனைசோபிளேயே ஆகியவை வேர்ப்புழுக்களில் பூஞ்சை நோயை உண்டாக்கி அழிக்கும் வல்லவை கொண்டவை. இதை வேப்பம்புண்ணாக்கு அல்லது மண்புழு உரம் அல்லது ஆமணக்கு புண்ணாக்குடன் கலந்து இடுவதால் அதிகளவில் பூச்சிகளை கவர்ந்து நோய் உண்டாக்குதலை கட்டுப்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு ஊட்டமேற்றிய மெட்டாரைசியம் அனைசோபிளேயே 2 கி.கி என்ற அளவில் இட்டு கட்டுப்படுத்தலாம். தவிர, இமிடாக்குளோபிரிடு 17.8 சதவீதம் ஒரு லிட்டருக்கு 0.5 மி.லி என்ற அளவில் மண்ணில் இட்டோ, விதை நேர்த்தி செய்தோ அல்லது கரணை நேர்த்தியின் மூலமோ புழுக்களை அழிக்கலாம். கூடுதல் தகவலுக்கு திருச்சி தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பயிர் பாதுகாப்பு துறையை 90805-05106 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.